

தமிழ்நாட்டில் கடந்த 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.1,427.34 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, திமுக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் எஸ். தமிழ்செல்வன் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையிலும், அமலாக்கத்துறை நடத்திய சோதனை அடிப்படையிலும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திறந்தவெளி ஒப்பந்த முறைக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட ஒப்பந்த முறையில் விதிகளை மீறி ஒப்பந்தங்களை வழங்கியது, அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி சட்டவிரோதமாக மணல் அள்ளியது, மற்றும் போலி அனுமதிச் சீட்டுகள் தயாரித்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள.
மொத்தம் 28 மணல் குவாரிகள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் நான்கு குவாரிகளிலிருந்து மட்டும் மாநில அரசுக்கு ரூ. 1,427.34 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் துரைமுருகன் தவிர, நீர்வளத்துறையின் ஓய்வுபெற்ற முதன்மை தலைமைப் பொறியாளர்கள் ஏ. முத்தையா, இராமமூர்த்தி, தற்போதைய அரசு ஊழியர்கள் 14 பேர் மற்றும் மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள், தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 27 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வழக்குப் பதிவைத் தொடர்ந்து இன்று சென்னை, வேலூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, புதுச்சேரி உள்ளிட்ட 34 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடிச் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் வழக்குக்கு தொடர்புடைய 825 முக்கிய ஆவணங்கள், 11 மின்னணு ஆவணங்கள் மற்றும் 3 வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.