திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டிற்கு பாராட்டுகள்- ஜவாஹிருல்லா

பாரம்பரியத்தைக் காப்பது பலவீனமல்ல, அது அரசின் பொறுப்புணர்வுக்கும் உறுதிக்கும் அடையாளம்.
Jawahirullah
Published on: 

திருப்பரங்குன்றம் மலை மீதிருக்கும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள வழக்கமான தீப மண்டபத்தில், மாலை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்ட தீபம்

திருப்பரங்குன்றம் மலை மீதிருக்கும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள வழக்கமான தீப மண்டபத்தில், மாலை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது .

மலை உச்சியில் உள்ள பழமையான கல்தூணில் (தீபத்தூண்) இந்த ஆண்டு ஒரு முறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டிருந்தது. அதைச் செயல்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளையும் உத்தரவிட்டிருந்த நிலையில் வழக்கமான இடத்திலே தீபமானது ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இல்லை என்பதைத் தமிழ்நாடு அரசு தனது முடிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதற்கு பாராட்டு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காலங்காலமாக தீபம் ஏற்றப்பட்டு வரும் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றுவதே மரபு. இந்த மரபை மாற்றி, சர்ச்சைக்குரிய நில அளவை கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற அழுத்தத்திற்கு அடிபணியாமல், பாரம்பரிய நடைமுறையை நிலைநாட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.

அரசு என்பது அழுத்தங்களுக்குப் பணிந்து முடிவெடுக்கும் அமைப்பு அல்ல; சட்டம், மரபு, வரலாறு மற்றும் சமூக நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உறுதியுடன் செயல்பட வேண்டிய அமைப்பு

நீண்ட கால மரபை அரசு மதித்திருப்பது பாராட்டிற்குரியது

மத உணர்வுகளைத் தூண்டி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்காமல், நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபை மதித்து அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு பாராட்டுக்குரியது.

திருப்பரங்குன்றத்தின் பாரம்பரியமும் மத நல்லிணக்கமும் காக்கப்பட வேண்டும். எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணியாமல், சட்டத்தின் அடிப்படையிலும் வரலாற்று மரபின் அடிப்படையிலும் அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்பட வேண்டும்.

பாரம்பரியத்தைக் காப்பது பலவீனமல்ல; அது அரசின் பொறுப்புணர்வுக்கும் உறுதிக்கும் அடையாளம் தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டை மனதாரப் பாராட்டுகிறேன்.

என்று தெரிவித்துள்ளார்.

X