

இல்லாத நடைமுறையைப் புதிதாகத் திணிக்காதீர்கள் என திருப்பரங்குன்றம் விவகாரம் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்ற தீபத்தூணில் நாளை (24ஆம் தேதி) கார்த்திகை திருநாளை முன்னிட்டு தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த நாகை எம்எல்ஏ ஜவாஹிருல்லா, "அனைத்து தரப்பு மக்களும் நல்லிணக்கத்தோடு, பாரம்பரியத்தோடு வாழக்கூடிய பூமியாக தமிழ்நாடு உள்ளது. நான் நாகை எம்.எல்.ஏவாக உள்ளேன்.
என்னுடைய தொகுதியிதான் நாகூர் தர்கா உள்ளது. முஸ்லீம்களை விட இந்துக்கள்தான் அதிகமாக நாகூர் தர்காவுக்கு வரக்கூடிய காட்சியை பார்க்கலாம். இப்படியான சமூக நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் என்பதுதான், பாஜகவினுடைய நோக்கம்.
அதைத்தான் ஹெச். ராஜா, தமிழ்நாட்டின் அயோத்தி திருப்பரங்குன்றம் என்று சொல்கிறார். திமுகவாக இருக்கட்டும், தவெகவாக இருக்கட்டும் அனைவரும் சமூக நல்லிணக்கம் நிலை நாட்ட வேண்டும் என்று விரும்புகிறோம்.
அப்படியான ஒரு நிலையில், இது மாதிரியான வெறியை ஊட்டி அதன் மூலமாக சமூக பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். அதற்கு திருப்பரங்குன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.
உச்ச நீதிமன்றம் வழங்கியது இறுதி தீர்ப்பு அல்ல. 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு இறுதி தீர்ப்பு என்றால், அதற்கு மேலே மறு சீராய்வு என்ற வழிமுறைகள் உள்ளன.
தீபம் ஏற்றுவது ஆகம விதிகளின்படி பொருத்தமான இடம் என்றால் திருவண்ணாமலை மட்டும்தான். அங்கு தீபம் ஏற்றப்படுகிறது.
உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது புதிய நடைமுறைதான். அதனால், இல்லாத நடைமுறையை திணிக்கிறீர்கள்.
சமூக நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கம் உங்கள் மக்களுக்கு மத்தியில் மோதலை ஏற்படுத்துவதாக உள்ளது. சமூக பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் நீங்கள் கனவு காணக்கூடிய ஆட்சி இங்கே வரவேண்டும் என நினைக்கிறீர்கள். அந்த கனவு ஒருபோதும் பலிக்காது" என்றார்.