

அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும் என்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகில் அநீதி தலைதூக்கும் போதெல்லாம், தர்மத்தை நிலைநாட்ட இறைவன் பூமியில் அவதரிப்பான் என்பது பகவத்கீதையின் உபதேசம் ஆகும். அதன்படி, திருமாலின் அவதாரமான கிருஷ்ணரின் வாழ்க்கை, மக்களின் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். தெய்வீக குணங்கள் முழுமையாக வெளிப்பட்ட அவதாரம் என்பதால், கிருஷ்ணரின் அவதாரம் 'பூர்ணவதாரம்' (முழுமையான அவதாரம்) என்று கருதப்படுகிறது.
கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில், நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.