கரூர் அரசு பணி விவகாரம்: விளக்க மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்த விவகாரத்தில் அரசியலை புகுத்த வேண்டாம் என முந்தைய விசாரணையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
கரூர் அரசு பணி விவகாரம்: விளக்க மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Published on: 

கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணி ஆணை ரத்துக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசுத்தரப்பில், “இந்த விவகாரத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அதற்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவைப்படுவதால் வழக்கை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “பணியாணை வழங்கிய விவகாரத்தில் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றதா?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், “கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிய விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, “அவ்வாறு மாற்றம் இல்லாத நிலையில் எதற்காக விளக்க மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோருகிறீர்கள் என தெரிவித்த நீதிபதிகள், விளக்க மனு தாக்கல் செய்ய 4 வார காலம் அவகாசம் வழங்குவதாக தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

வழக்கின் பின்னணி

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினரில் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டது.

இதற்கான பணி ஆணையை முதலமைச்சர் விஜய் வழங்கினார். இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த அரசு பணியாணைகளை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் பாதிக்கப்பட்ட பிரபாகரன் செல்வகுமார், ஆனந்த ஜோதி, பிரபாகரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை வந்தது.

அப்போது நீதிபதிகள், “கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிலர் உயிரிழந்து விட்டனர். அது துரதிஷ்டவசமான சம்பவம். அப்படி இருக்கையில் அரசு அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு நபருக்கு வேலை வழங்குகிறது என்ற பட்சத்தில், வேலை வழங்கக் கூடாது என கூறுவதற்கு நீங்கள் யார்?

ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலை பார்க்கும் நபராக இருக்கலாம். அவர்தான் குடும்பத்தை வழி நடத்துபவராக இருக்கலாம் அவ்வாறான ஒருவர் இதுபோன்று நெரிசலில் சிக்கி உயிரிழந்திருந்தால் அவருக்கு வேலை வழங்கக் கூடாது என்று கூறுகிறீர்களா? என கேள்விகளை எழுப்பி, இந்த விவகாரத்தில் தயவு செய்து அரசியலை புகுத்த வேண்டாம் என தெரிவித்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

X