

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பேச்சுவார்த்தையை அடுத்து உடல்களை வாங்க சம்மதித்துள்ளனர்.
உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 3 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.
மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.