

சிறப்பான நடிப்பு, தனித்துவமான ஆளுமை மற்றும் இந்தி மற்றும் பிராந்தியத் திரைப்படத் துறைக்கு நானா படேகர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு ஆகியவை நம் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது மரணச் செய்தி திரைத்துறையினர், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் 2008 இல் வெளியான பொம்மலாட்டம் படத்தில் நடித்திருந்தார் நானா படேகர்.
கடைசியாக தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ‘காலா’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் கவனத்தை நானா படேகர் ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நானா படேகர் மறைவுக்கு தி.மு.க. எம்.பி.கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மூத்த நடிகர் நானா படேகர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது சிறப்பான நடிப்பு, தனித்துவமான ஆளுமை மற்றும் இந்தி மற்றும் பிராந்தியத் திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு ஆகியவை நம் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சிறப்பான படைப்புகளின் வாயிலாக அவரது நினைவுகள் என்றும் நிலைத்திருக்கட்டும் என்று கூறியுள்ளார்.