கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பும் உதயநிதி? நாளை உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு!

மக்களின் நலனைப் பாதுகாப்பதும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி பெற்றுத் தருவதும் எதிர்க்கட்சித் தலைவரின் கடமையே ஆகும்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பும் உதயநிதி? நாளை உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு!
Published on: 

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருவதாக, தமிழ்நாடு அரசுத்தரப்பில் இன்று உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிமன்றம், இன்று உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி தொடர்பான வீடியோக்களையும், செய்திகளையும் இணையப் பக்கங்களில் இருந்து நீக்குமாறும், உயர்நீதிமன்ற உத்தரவை உதயநிதி ஸ்டாலின் மீறி இருந்தால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாளை நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

“எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் துறையூர் விவகாரம் தொடர்பாக மனு அளிப்பதற்காக இன்று காலை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்றார்.

டிஜிபி இல்லாததால், ஐஜி (பொது)மனுவைப் பெற்றுக்கொண்டார்; டிஜிபி இவ்விவகாரத்தைப் பரிசீலிப்பார் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்து அளிக்கப்பட்ட மனு குறித்து விளக்கினார்.

மக்களின் நலனைப் பாதுகாப்பதும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி பெற்றுத் தருவதும் எதிர்க்கட்சித் தலைவரின் கடமையே ஆகும். உயர் நீதிமன்றம் இவ்விவகாரத்தை விசாரித்து, தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதால், தனி நீதிபதி முன் நடைபெற்று வரும் தற்போதைய வழக்கில் இணைய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவல்களுடனும், உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகவும் பத்திரிகை அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் என்று மாநில அரசு நீதிபதி முன் வாய்மொழியாக முறையிட்டதாக அறிகிறோம்.

அந்தப் பத்திரிகை அறிக்கை நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக இருந்தால், அவற்றை நீக்கலாம் என நீதிபதி கருத்துத் தெரிவித்ததாகவும் அறிகிறோம். எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கோ அல்லது POSH சட்டத்திற்கோ எதிரானது எதுவும் இல்லை.

நாளை நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு, எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிவிக்காமலேயே மாநில அரசு செய்த முறையீடு தவறான தகவல்களின் அடிப்படையிலானது என்பதை விளக்குவோம்.

மாநில அரசு தனது பிம்பத்தை இந்த அளவிற்குத் தாழ்த்திக் கொண்டுள்ளதால், நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் எதிர்க்கட்சி என்ற முறையில் இவ்வழக்கில் இணைவதற்கும், நீதிமன்றத்தின் அனுமதியை நாங்கள் கோருவோம். இது எதிர்க்கட்சியின் முக்கிய கடமையாக நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X