

இந்தியாவில் தேசிய காவலர் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 -ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் லடாக் எல்லையில் சீனப் படைகளுடன் நடந்த தாக்குதலில் 10 இந்தியக் காவலர்கள் உயிர் தியாகம் செய்தனர். இவர்களை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் இன்றைய தேதியில் காவலர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில், காவல்துறை சேவையில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் இன்று கலந்துகொண்ட காவலர்கள் அணிந்துகொண்ட பேட்ஜில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் காவல்துறை கொடி நாள் என எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
“தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. தவெக ஆட்சியில் அது “இந்தியும் ஆங்கிலமும்” என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா?
காவல் துறை கொடி நாளில், இந்தியும், ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள பேட்ஜை தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன்?
காவல்துறை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறை என்பதை, அந்தத் துறையைத் தனது நேரடிப் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் அறிவாரா?
அல்லது மாநிலத்தின் மொழி உரிமையோடு சேர்த்து, காவல்துறை மீதான தனது அரசியல் பொறுப்பையும் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்து சரணடைந்துவிட்டாரா?
தமிழ்நாட்டில் தமிழ் கேட்பது கூட இன்று ஒரு கேள்வியாக வேண்டிய நிலை வந்திருப்பதே வேதனை.
குறிப்பு: பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு அழுத்தத்தை கொடுத்த நிலையில் திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது. இன்றைய அரசுக்கு முதுகெலும்பு ஏது !” எனக் குறிப்பிட்டுள்ளது.