

சென்னை உயர்நீதிமன்றம், முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து, சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என தீர்ப்பளித்தது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து, தொகுதி வாக்காளர் தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார். முதலமைச்சர் விஜய் தரப்பில், வேட்புமனுவில் அனைத்து தகவல்களையும் தெரிவித்து உள்ளதாகவும், எந்த தகவலையும் மறைக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது.
‘வேட்புமனுவில் தகவல்களை மறைப்பது வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு, குற்ற வழக்கு சம்பந்தப்பட்டது. விஜய் வசதி படைத்தவர் என எல்லா வாக்காளருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது, சொத்தை மறைத்ததாக கூறி, அது வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எப்படி கூற முடியும்’ என வாதிடப்பட்டது.
தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்த வாக்காளர் தினேஷ் தரப்பில், ‘முதலமைச்சர் விஜய் தனது வேட்புமனுவில், பண்ருட்டியில் வாங்கியிருந்த ரூ.30 கோடி மதிப்பிலான விவசாய நிலம் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை’ என வாதிடப்பட்டது. ‘வேட்புமனுக்களில் குற்ற வழக்குகளை மறைப்பது எப்படி விதிமீறலோ, அதேபோல சொத்து விவரங்களை மறைப்பது விதி மீறல் மட்டுமல்ல ஊழல் நடவடிக்கை. விவரங்கள் மறைத்தது குறித்து தேர்தல் அதிகாரி முழுமையான விசாரணை நடத்த முடியாது. தேர்தல் வழக்கில் தான் இதுகுறித்து விரிவாக விசாரிக்க முடியும் என்பதால், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கூடாது’ என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பெரம்பூர் தொகுதியில் தான் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரி முதலமைச்சர் விஜய் தொடர்ந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
நீதிபதி வி.லட்சுமி நாராயணன் தனது தீர்ப்பில், “பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க முடியாது. எனவே முதலமைச்சர் விஜய் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் தினேஷ் தொடர்ந்த வழக்கில் முதலமைச்சர் விஜய் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.