

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சிகளில் ஒன்று த.மா.கா. இந்த கட்சியின் தலைவரான ஜி.கே.வாசன் டெல்லி பா.ஜ.க. தலைவர்களுடன் நெருங்கிய நட்பு வைத்திருப்பவர்.
பிரதமர் மோடியுடன் தமிழகத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது இருவருக்கும் இடையிலான நட்பு மேடைகளிலேயே வெளிப்பட்டதை பார்க்க முடிந்தது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கேட்ட தொகுதிகள் ஒதுக்காதது மற்றும் தொகுதி எண்ணிக்கையில் இழுத்தடித்தது ஆகியவை ஜி.கே.வாசனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
தேர்தலில் விஜய் அலையில் சிக்கி முன்னணி கட்சிகளே தடுமாறி போனது. எல்லா கட்சிகளிலும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் த.மா.கா.வும் வெளியேறும் நிர்வாகிகளை தக்க வைக்க முடியாமல் தடுமாறுகிறது. ஏற்கனவே வடசென்னை மாவட்ட தலைவர் பிஜூ சாக்கோ, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மலையூர் புருசோத்தமன் உள்ளிட்டோர் விலகி விட்டனர்.
கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜாவும் விலகி த.வெ.க.வில் சேர இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும் சில மாவட்ட தலைவர்களும் விலக முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் ஜி.கே.வாசன் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார்.
கூட்டணி அதிருப்தியால் தான் அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக வாசன் முடிவு செய்து இருப்பதை த.மா.கா. நிர்வாகிகள் உறுதிப்படுத்தினார்கள்.
த.மா.கா. செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (14-ந்தேதி) சென்னையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்டமாக கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் பற்றி ஆலோசனை கேட்கிறார்.
இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்த அனுபவம் ஏற்கனவே புரிந்துவிட்டது. புதிதாக விஜய் மிகப்பெரிய பலத்துடன் அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு சவால்விடும் வகையில் புதிதாக அண்ணாமலையும் கட்சி தொடங்கி இருக்கிறார். கட்சியின் நீண்ட கால அரசியல் நிலைத்தன்மைக்கு ஏற்ற வகையில் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி எங்கள் கருத்துக்களை செயற்குழுவில் தெரிவிப்போம் என்றனர்.