ஜெம் வீரமணி வழக்கில் விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சிறுமிகள் பாலியல் கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
anbumani ramadoss
Published on

ஜெம் வீரமணி வழக்கு

தமிழ்நாட்டில் கிரானைட் தொழிலதிபரான ஆர்.வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில்,வீரமணியின் முக்கிய உதவியாளர்கள் உட்பட் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் தினமும் அதிர்சியூட்டும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த கொடூர சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது

ஒவ்வொரு நாள் வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது

சென்னையில் தொழிலதிபர் ஜெம் வீரமணி என்பவரால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

சிறுமிகள் சீரழிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருந்தது தெரிந்திருந்தும் இந்த வழக்கின் குற்றவாளிகளை தப்பிக்கச் செய்வதற்கு கடந்த காலங்களில் முயற்சி செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

குழந்தைகளை தெய்வமாகக் கொண்டாடுவது தான் தமிழர்களின் பண்பாடு ஆகும். ஆனால், குழந்தைகளின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதை ஆயுதமாகக் கொண்டு அவர்களை சமூகத்தில் பெரிய மனிதர்கள் போர்வையில் இருப்பவர்கள் சீரழிப்பதை சகித்துக் கொள்ள முடியாது.

கடந்த பல பத்தாண்டுகளாகவே இந்தக்கொடுமை தொடர்ந்திருப்பதும், கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதியே இது குறித்து காவல்துறையில் ஆதாரங்கள் அளிக்கப்பட்ட போதிலும், தொடர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

போக்சோ நீதிமன்றத்தின் அக்கறை பாராட்டத்தக்கது

போதிய ஆதாரங்கள் இல்லாததாகக் கூறி, அந்த வழக்கு கைவிட அனுமதி கோரி கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதை ஏற்க நீதிபதி மறுத்து விட்டதன் பயனாகத் தான் இந்தக் கொடுமையில் சம்பந்தப்பட்ட பலரும் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் சென்னை போக்சோ நீதிமன்றம் காட்டிய அக்கறையும், கடுமையும் பாராட்டத்தக்கவை.

விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்

சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விசாரணையில் தெரியவரும் தகவல்களின் அடிப்படையில், தேவைப்பட்டால் போக்சோ வழக்கு பிரிவுகளை மாற்ற வேண்டும்.

சிறுமிகள் சீரழிக்கப்பட்டது மட்டுமின்றி, அதற்கு துணையாக இருந்தவர்கள், வழக்கிற்கு மூடுவிழா நடத்த முயன்றவர்கள் ஆகியோரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்.

என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com