4 ஆண்டுகளாக அவதி: பேட்டரி வாகனம் கேட்டு மாற்றுத்திறனாளி மாணவியின் தாய் தமிழக அரசுக்கு கோரிக்கை!

கடந்த ஆட்சிக்காலத்தில் பேட்டரி வாகனம் கேட்டு விண்ணப்பித்த நிலையில், மாணவிக்கு வீல் சேர் வழங்கப்பட்டுள்ளது.
 Differently-abled student
Published on: 
Summary

மாணவியின் தாய் தனது மகளின் சிரமத்தைக் குறைப்பதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி இயங்கும் சக்கர நாற்காலி அல்லது வாகனம் கேட்டு கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு கட்ட மனுக்களை அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் நாள்தோறும் மிகுந்த சிரமத்திற்கு இடையே தாங்கி தாங்கி நடந்து பள்ளிக்குச் சென்று வரும் அவலநிலை நிலவி வருகிறது. தனது மகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அரசு சார்பில் பேட்டரி வாகனம் வழங்கக் கோரி கடந்த 4 ஆண்டுகளாக அவரது தாய் தொடர்ந்து மனு அளித்து போராடி வருகிறார்.

நடக்க முடியாத நிலையிலும் தொடரும் கல்வி பயணம்

சம்பந்தப்பட்ட மாணவிக்கு கால்களில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இயல்பாக நடக்க இயலாத சூழ்நிலை உள்ளது. இருப்பினும், கல்வியின் மீது கொண்ட அளப்பரிய ஆர்வத்தால் தினமும் கடும் உடல் உபாதைகளுக்கிடையிலும் பள்ளிக்குச் சென்று வருகிறார். சரியான போக்குவரத்து வசதியோ அல்லது உதவி உபகரணங்களோ இல்லாததால், ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும் பயணம் அந்த மாணவிக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

தாயின் உருக்கம்

மாணவியின் தாய் தனது மகளின் சிரமத்தைக் குறைப்பதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி இயங்கும் சக்கர நாற்காலி அல்லது வாகனம் கேட்டு கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு கட்ட மனுக்களை அளித்துள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில் பேட்டரி வாகனம் கேட்டு விண்ணப்பித்த நிலையில், மாணவிக்கு வீல் சேர் வழங்கப்பட்டுள்ளது.

பலமுறை அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார். தனது மகளின் நிலையை விவரித்த தாய், "என் மகள் படும் வேதனையை தினமும் என்னால் பார்க்க முடியவில்லை. அரசு உடனடியாக தலையிட்டு பேட்டரி வாகனம் வழங்கி, அவளது பள்ளிப் படிப்பை தடையின்றி தொடர உதவ வேண்டும்" என உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் இச்செய்தி பரவி வரும் நிலையில், உடனடியாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாணவிக்கு உடனடியாக பேட்டரி வாகனம் வழங்கி அவரது கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருக்க அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com