ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது அமலாக்கத்துறை விசாரணை!

இந்த திடீர் விசாரணை தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Anbil Mahesh
Published on: 
Summary

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்வு மற்றும் DTCP, CMDA உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராக அமலாக்கத்துறை தற்போது அதிகாரப்பூர்வமாகத் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது.

வழக்கின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கைகள்

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த மோசடி வழக்கைப்பதிவு செய்தனர்.

பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து பெருமளவில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அனுமதியும் பெற்றுத் தராமல் ஏமாற்றியதாகத் திமுக பிரமுகர் பி.டி. அரசகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளான ஆரோக்கியராஜ், சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடியில் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்க உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மத்திய குற்றப்பிரிவின் வேட்டை

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிற்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அவரது வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உதவியாளர்களின் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தச் சோதனைகளில் 118 முக்கிய ஆவணங்கள், லேப்டாப்கள் மற்றும் 18 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரான அன்பில் மகேஷிடம் போலீசார் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை அவரது கூட்டாளிகளின் இடங்களில் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் மேலும் 44 ஆவணங்கள் சிக்கின.

களம் இறங்கிய அமலாக்கத்துறை

மத்திய குற்றப்பிரிவு போலீசார் திரட்டிய அனைத்து முக்கிய ஆவணங்கள் மற்றும் எஃப்.ஐ.ஆர் நகல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது முறைப்படி பெற்றுக்கொண்டுள்ளனர்.

பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ.100 கோடி லஞ்சப் பணம் எங்குச் சென்றது, சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனைகள் எவ்வாறு நடைபெற்றுள்ளன என்பது குறித்து அமலாக்கத்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பி.டி. அரசகுமார் ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களில் எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை அதிரடிச் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எவ்வித இடைக்கால நிவாரணமும் வழங்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறையின் இந்த திடீர் விசாரணைத் தொடக்கம் தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com