நடிகர்கள் பெயரை திரித்து போலி எழுத்தாளர்கள்: புத்தக கொள்முதலில் மெகா ஊழல் - அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு

பல வருடங்களாக திமுக ஆட்சியில் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் போலி புத்தகங்களை உருவாக்கி கூட்டு சதி செய்து ஊழல் செய்துள்ளது.
Minister Rajmohan
Published on: 
Summary

விஜய் பெயரில் போலி எழுத்தாளர்கள், இல்லாத பதிப்பகம் பெயரில் 523 புத்தகங்கள் கொள்முதல் - AI மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் என ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளனர்.

பெரியார் நூலக சர்ச்சை தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திமுக ஆட்சிக்காலத்தில் நூலகங்களுக்கான புத்தக கொள்முதலில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஸ்காட்லாந்து போலீசாரால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு போலியாக புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விஜய் பாலு, விஜய் ஆதித்தன் போன்ற பெயர்களை எழுத்தாளர்களாக காட்டி 2025-ம் ஆண்டுக்கான சீல் வைத்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக கன்னிமாரா நூலகத்தில் மட்டும் அகல்விளக்கு பதிப்பகத்தின் பெயரில் 523 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அந்த பதிப்பகம் எங்கு இருக்கிறது என்பதே பபாசி அமைப்புக்கு தெரியவில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக கூறினார்.

நடிகர், நடிகைகளின் பெயரில் புத்தகம்

மேலும், நடிகர், நடிகைகளின் பெயர்களை திரித்து போலியாக எழுத்தாளர்கள் போல் சித்தரித்து புத்தக கொள்முதல் மூலம் ஊழல் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பவித்ரா கருணாநிதி, கமலாம்பாள் கருணாநிதி என்ற பெயர்களில் எல்லாம் யார் எழுத்தாளர்கள் என கேள்வி எழுப்பிய அமைச்சர், திமுக ஆட்சியிலேயே விஜய் பெயரிலும் போலி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார்.

பல வருடங்களாக திமுக ஆட்சியில் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் போலி புத்தகங்களை உருவாக்கி கூட்டு சதி செய்து ஊழல் செய்துள்ளதாகவும், ஆட்சி மாற்றம் வரும் என்பதை எதிர்பார்க்காத திமுக, தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் சிக்கிக்கொண்டதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

X