

அதிமுகவின் 55-வது தொடக்க இன்று கொண்டாடப்படுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். அதேவேளையில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் போன்றோர் தலைமை அலுவலகத்திற்கு வருகை தரவில்லை. எஸ்.பி. வேலுமணி கோவையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.
சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்தார். பின்னர், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாண்புமிகு அம்மாவால் கட்டி காப்பாற்றப்பட்ட இந்த மாபெரும் கழகத்தின் 55-ம் ஆண்டின் துவக்க விழா. 31 வருடங்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த, இந்தியாவிலேயே ஒரே கட்சி அதிமுக. அப்படிப்பட்ட பேரியக்கம் இன்று 55-வது துவக்க விழாவை கண்டிருக்கிறது.
இந்த நாளில் அனைத்து தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு அதிமுக வலிமை பெற வேண்டும், புத்துயிர் பெற வேண்டும், மீண்டும் எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா ஆட்சி மலர வேண்டும் என்பதுதான்.
இந்த இயக்கம் வலிமைப் பெற ஒற்றுமையாக அனைவரையும் அரவணைத்து பிரிந்தவர்கள், சென்றவர்கள், நீக்கி வைக்கப்பட்டவர்கள், ஒதுங்கி இருப்பவர்கள் என அனைவரையுமே மறப்போம் மன்னிப்போம், பழையது பற்றி நினைக்காமல் இனி என்ன செய்ய வேண்டும் சிந்தித்து..,
தவறுகள் இரண்டு பக்கமும் இருக்கலாம், நானும் தவறு செய்திருக்கலாம், அவர்களும் தவறு செய்திருக்கலாம், தவறுகளை பார்க்காமல் அனைத்தையும் மறந்து ஒரே எண்ணம், ஒரே சிந்தனை, நம்மை ஆளவைத்த, கோடிக்கணக்கான மக்களை வாழவைத்த இயக்கம், லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு பதவிகள் கொடுத்து அழகு பார்த்த இந்த இயக்கம், இந்த இயக்கும் 100 ஆண்டுகள் நிலைத்திருந்து மக்களுக்கு சேவை செய்யும் என்று அம்மா சொன்ன அந்த வார்த்தையை செயல்படுத்த நாம் ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம், ஆசை.
சசிகலா உள்பட அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும். யாரையும் விடக்கூடாது. ஒரு சிறு துரும்பை கூட விடக் கூடாது. அப்போதுதான் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை முதலில் தொண்டர்களுக்கு வர வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்.
தொண்டர்கள் களத்தில் நம்பிக்கையோடு பணியாற்றினால்தான் மக்களுக்கு நம்மீது நம்பிக்கை வரும். அந்த எண்ணத்தையும், நம்பிக்கையும் உருவாக்க வேண்டும் என்றால் எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும். அதிமுக பிளவு பட்டு இல்ல, ஒன்றாகிவிட்டார்கள், வலுவாக இருக்கிறார்கள், மீண்டும் பழைய அதிமுக வந்திருச்சி என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும்.
அதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாடுபட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள், கோரிக்கை.
இவ்வாறு சி.வி. சண்முகம் தெரிவித்தார்.