

அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து குவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2016-2021-ம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது போடப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
வருமானத்திற்கு அதிகமாக 54 சதவீதம் அளவுக்கு அவரும், அவரது மனைவியும் சொத்துக்களை வாங்கி குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கடந்த 2021-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜய பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி ரூ.23 லட்சம் ரொக்க பணத்தை கைப்பற்றினார்கள். தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் சி.விஜயபாஸ்கருக்கும், அவரது மனைவி ரம்யாவுக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வருகிற 6-ந்தேதி விஜயபாஸ்கர் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவரது மனைவி ரம்யா அடுத்த வாரம் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவிற்கு சொத்துக்களை குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி சொத்துக்களை வாங்கி குவிப்பது சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்து இருப்பதாக எழுந்த புகாரின் பேரிலேயே அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்பி உள்ளது.
அ.தி.மு.க.வில் பரபரப்பாக செயல்பட்டு வந்த விஜயபாஸ்கர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார். இதனால் அவரது விராலிமலை தொகுதி காலியாக உள்ளது. அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் விஜயபாஸ்கர் அங்கு மீண்டும் போட்டியிடுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். இது போன்ற சூழலில் தான் அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது அரசியல் களத்திலும், விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் இடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.