வைதீக முறைப்படி ஏன்?: பேத்தியின் திருமணம் குறித்து துரைமுருகன் விளக்கம்

துரைமுருகன் பேத்தியின் திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்திருந்தார்.
duraimurugan
Published on: 
Summary

பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான் வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத்திருமண விழா கடந்த 1-ம் தேதி நடந்தது. இந்தத் திருமண விழாவில், மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதப்பட்டது தற்போது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன.

இதற்கிடையே, தி.மு.க. பொதுச் செயலாளர் இல்லத்தில் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான் வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது என துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எனது பேத்தி திருமணம் குறித்து சில விளக்கங்களை கழகத் தோழர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புவது யாதெனில்;

கலைஞரின் அடியொற்றி, நீண்ட அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் எனது திருமணம், கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அதைப்போலவே, நான் முன்னின்று நடத்திய என் மகன் திருமணம் கலைஞர் தலைமையில் நடைபெற்றது என்பதை நாடே அறியும்.

அயல்நாட்டில் கல்வி பயின்ற எனது பேத்தி, தான் வேற்று சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், வைதீக முறைப்படியே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

அவரது விருப்பத்தின்படியே வைதீக முறையில் எனது பேத்தியின் திருமணம் நடைபெற்றது. எனது பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான், இவ்வைதீக முறை திருமணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.

நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை அரசியலாக்கவோ அல்லது விவாதப் பொருளாக்கவோ யாரும் முன்வர வேண்டாம் என்பதைக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

X