காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

வாடும் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கடுமையாக போராடி வரும் நிலையில், அவர்களின் துயரங்களைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
anbumani ramadoss
Published on: 

காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்கள் வாடத் தொடங்கியுள்ளன. எனவே காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது

விவசாயிகளின் துயரத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேட்டூர் அணையிலிருந்து ஒரு மாதத்திற்கு மேலாக காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும், வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்கள் வாடத் தொடங்கியுள்ளன.

வாடும் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கடுமையாக போராடி வரும் நிலையில், அவர்களின் துயரங்களைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக 18 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் போதிலும், சாகுபடிக் காலம் முழுமைக்கும் தண்ணீர் வழங்க முடியாது என்பதை உணர்ந்ததால், வழக்கமாக அளவை விட பாதிக்கும் குறைவாக சுமார் 7 லட்சம் ஏக்கரில் தான் சம்பா/தாளடி பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். ஆனால், அந்த பயிர்களையும் காப்பாற்ற முடியவில்லை.

கருக தொடங்கியிருக்கும் பயிர்கள்

மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததைக் காரணம் காட்டி, கடந்த அக்டோபர் 15&ஆம் தேதி வினாடிக்கு 10,920 கன அடியாக இருந்த நீர்த்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு, அக்டோபர் 25&ஆம் தேதி 1003 கன அடியாக குறைக்கப்பட்டது.

இப்போது வரை அதே அளவில் தான் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அது குடிநீர்த் தேவையின் ஒரு பகுதியை மட்டுமே நிறைவேற்றும்.

இன்னொருபுறம் விவசாயிகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழையும் இதுவரை குறிப்பிடக்கத்தக்க அளவில் பெய்யாதது தான் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா/தாளடி பயிர்கள் கருகத் தொடங்கியிருப்பதற்கு காரணமாகும்.

சம்பா நெற்பயிரைக் காப்பாற்றுவதற்காக சில பகுதிகளில் உள்ள விவசாயிகள் வெளியிலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி, வயல்களில் பாய்ச்சுகின்றனர். வசதி இல்லாத உழவர்கள் அருகிலுள்ள நீர்நிலைகளில் இருந்து பானைகளில் தண்ணீரை எடுத்து வந்து ஊற்றுகின்றனர்.

ஆனால், சம்பா/தாளடி பயிர்களின் சராசரி வாழ்நாள் 120 முதல் 125 நாள் ஆகும். ஆனால், பெரும்பாலான பயிர்கள் இப்போது 40 முதல் 50 நாள்களை மட்டுமே கடந்துள்ள நிலையில், இன்னும் 70 முதல் 80 நாள்களுக்கு இதே முறையில் தண்ணீர் வழங்குவது சாத்தியமல்ல.

அடுத்த சில நாள்களில் வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்து, திசம்பர், ஜனவரி மாதங்களில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டும் தான் சம்பா பயிர்களைக் காப்பாற்ற முடியும்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 61.53 அடியாகவும், நீர் இருப்பு 25.84 டி.எம்.சியாகவும் குறைந்து விட்டது. இந்த நீரைக் கொண்டு அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும். வடகிழக்கு பருவமழையும் குறிப்பிடத்தக்க அளவில் பெய்யாவிட்டால் பயிர்களைக் காப்பாற்ற முடியாது.

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படாததால், நடப்பாண்டில் குறுவை சாகுபடி பெரிய அளவில் செய்யப்படவில்லை. இப்போது சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்காக உழவர்கள் ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவு செய்துள்ளனர். இத்தகைய சூழலில் சம்பா/தாளடி பயிர்களும் வறட்சியால் வாடி கருகிவிட்டால், அதனால் உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது. வட்டிக்கு கடன் வாங்கி சம்பா சாகுபடி செய்துள்ள காவிரி பாசன மாவட்ட உழவர்கள் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள்.

வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்

உழவர்களின் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த தவெக, இப்போது அனைத்து உழவர்களுக்கும் ரூ.75,000 கடனை மட்டுமே தள்ளுபடி செய்திருப்பதால், மீதமுள்ள கடன்தொகையை உடனடியாக செலுத்தும்படி கூட்டுரரௌ வங்கிகளில் இருந்து அழுத்தம் தரப் படுகிறது. சம்பா சாகுபடியில் ஏற்பட்ட இழப்பும் இத்துடன் சேர்ந்து கொண்டால் உழவர்கள் நிலை மோசமாகிவிடும்.

இந்த மோசமான நிலையிலிருந்து உழவர்களைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, அதற்குரிய இழப்பீடுகளை வழங்குவது தான். இந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், காவிரி பாசன மாவட்டங்களுக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பி ஆய்வு செய்து, அவற்றை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

இழப்பீடு வழங்கி, பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்

வறட்சியால் வாடிய சம்பா/தாளடி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். நிலவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முழுமையாக ரத்து செய்வதுடன், உழவர்கள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

X