தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்: தினசரி 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

'குடெங்கா' என்ற டெங்கு தடுப்பூசி அடுத்த ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Dengue Fever
Published on
Summary

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே, மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து தினசரி 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடப்பு ஆண்டில் இதுவரை 17,277 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்திலேயே அதிகபட்சமாகச் சென்னை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இந்த செப்டம்பர் மாதத்தில் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பரவிய தொற்று

சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவர் ஹரிஷ் குமார் அண்மையில் காய்ச்சலால் உயிரிழந்தார்.

இதற்கு முன்னதாக மிருதுளா, ஜெயஸ்ரீ ஆகிய மாணவிகளும் அடுத்தடுத்து பலியானதால் கேம்பஸ் முழுவதும் பெரும் அச்சம் நிலவியது.

ஆனால், மாணவர் ஹரிஷ் குமார் டெங்குவால் இறக்கவில்லை, அவர் உண்ணிக்காய்ச்சல் பாதிப்பால் தான் இறந்தார் என்று பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இதில் பரிசோதிக்கப்பட்ட 200 மாணவர்களில், 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்த தட்டை அணுக்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் உடனடியாக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களின் தற்போதைய நிலவரம்

சென்னையைத் தவிர்த்து செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 2,000 பேர் டெங்கு காய்ச்சலுக்காகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகள்

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கொசு ஒழிப்பு மற்றும் தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வீடுகளைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"கடந்த ஒரு வாரமாக டெங்கு பாதிப்பு சற்று அதிகரித்திருந்தாலும் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை" என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழக வெற்றிக் கழக அரசின் மெத்தனப் போக்கே இந்த பாதிப்புக்குக் காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் மக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீரை உடனடியாக விநியோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டு வருகிறது புதிய தடுப்பூசி!

டெங்கு பரவலுக்கு மத்தியில், ஜப்பானின் டகேயா நிறுவனத்துடன் இணைந்து 'குடெங்கா' என்ற இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியை அடுத்த ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்த டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம் திட்டமிட்டுள்ளது.

4 முதல் 60 வயதுடையவர்களுக்கு 3 மாத இடைவெளியில் 2 தவணைகளாக இந்தத் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், இது 4 வகையான டெங்கு வைரஸ்களுக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com