

சென்னை கூவம் ஆற்றை இயற்கை நிலைக்கு மீட்டெடுத்து, நிலையான சுற்றுச்சூழல் சீரமைப்பை உறுதி செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பை முதல்வர் விஜய் தலைமையில் அரசு தீவிரமாக முன்னெடுக்கிறது. 2026-27 நிதிநிலை அறிக்கையில் முன்னுரிமை பெற்ற இந்த திட்டத்தின் தொடக்கமாக, 3 கி.மீ நீளப் பகுதியில் நடைபாதை, மிதிவண்டிப் பாதை, பசுமை வளாகம், சமூக வசதிகள் உருவாக்க ஆய்வு நடைபெற்றது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு, 2026 - 2027 நிதிநிலை அறிக்கையில், சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
அதனடிப்படையில், நடைபெற்ற இக்கூட்டத்தில், முதலமைச்சர், கூவம் ஆற்றை அதன் இயற்கையான நிலைக்கு மீட்டெடுக்கவும், நிலையான சுற்றுச்சூழல் சீரமைப்பை உறுதி செய்யவும், விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் இத்திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகள்.
அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், பன்னாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தர நிலைகளை உறுதி செய்யும் வகையில் இதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கான பணிகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
இதன் தொடக்க நடவடிக்கையாக, கூவம் ஆற்றின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான கருத்துருவாக்கம் மற்றும் செயல் விளக்கத் திட்டம் மேற்கொள்ள, முதற்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கி.மீ நீளமுள்ள பகுதிகளில், நடைபாதை மற்றும் மிதிவண்டிப் பாதைகள், நதிக்கரை நடைபாதைகள், பார்வையிடும் தளங்கள், பசுமைப் பகுதிகள், சமூகப் பயன்பாட்டு வசதிகள், இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகள் செய்யப்பட்டது. சென்னை மாநகரின் நதிச்சூழலை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த பொதுவெளிகளையும், வசதிகளையும் உருவாக்கும் நோக்கில், கூவம் ஆறு மறுசீரமைப்பு பல்வேறு கட்டங்களாக ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறையுடன் முன்னெடுத்துச் செல்ல முதலமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக், நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் வடநெரே, சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் உறுப்பினர் செயலர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.