

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக விஜய் தலைமையிலான கூட்டத்தை திமுக - அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.
மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றன. திமுக, அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து திமுக, அதிமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த எம்.பி.க்கள் இன்பதுரை, தம்பிதுரை, தனபால், தர்மர் ஆகிய 4 பேரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை எம்.பி.யும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தேமுதிகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுதீஷூம் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.