

முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் மற்றும் உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு ரோடு-ஷோ மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் ரூ.19 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் புதிய உள் விளையாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்த புதிய கட்டிடங்களின் திறப்பு விழா வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, புதிய பஸ் நிலையம் மற்றும் உள் விளையாட்டு அரங்கத்தைத் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் வருகிற 2-ந்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகை தருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாகவோ அல்லது சாலை மார்க்கமாகவோ புதுக்கோட்டைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேட் தளத்தை மாவட்ட கலெக்டர் அருணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா ஆகியோர் நேற்றிரவு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
புதுக்கோட்டை நகருக்கு வருகை தரும் முதலமைச்சர் விஜய்க்கு, தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக விஜய் ‘ரோடு ஷோ’ செல்லத் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விராலிமலை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் புதுக்கோட்டை வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.