

மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பிரமாண்ட ‘ரோடுஷோ’ நடத்தி பிரசாரம் செய்கிறார்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் த.வெ.க. வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் த.வெ.க.வினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து த.வெ.க. தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடந்த 25-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து 2-வது முறையாக இன்று மதுராந்தகம் செல்லும் முதலமைச்சர் விஜய் பிரமாண்ட ‘ரோடுஷோ’ நடத்தி பிரசாரம் செய்கிறார்.
இன்று பிற்பகல் தொகுதிக்குட்பட்ட மாமண்டூரில் பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர் விஜய் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.
இந்நிலையில், த.வெ.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்திற்கு இடையூறாக யாரும் வாகங்களை நிறுத்துவதோ அல்லது வந்து செல்வதோ, கண்டிப்பாகக் கூடாது.
மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜயின் ரோடுஷோவின்போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.
ரோடுஷோவில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் ரோடுஷோவில் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளவர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, ரோடுஷோ வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.