

தமிழ் நாடு முழுவதும் மகளிருக்கான இலவச பேருந்து பயண விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (அக். 2) தொடங்கி வைக்கிறார். தமிழ் நாட்டில் பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பயண திட்டத்தை கடந்த தி.மு.க. அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி, மாநகர மற்றும் நகர்ப்புற சாதாரண அரசு பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சட்டசபை தேர்தலின் போது த.வெ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், த.வெ.க. ஆட்சி அமையும்போது மகளிர் பயணத்திட்டம் அனைத்து அரசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம், 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில், விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் திருநரும் (திருநங்கைகள்) கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என்று அரசு கணித்துள்ளது.
தற்போது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டர்கள் வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். ஆனால் வெற்றிப் பயண திட்டத்தின் மூலம் இந்த சேவை மாநகர, நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகள், புறநகர் சாதாரண அரசு பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டர்களுக்கும் மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, மொத்தமாக 12,695 பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன.
அதாவது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்தமுள்ள 18,413 பேருந்துகளில், 12,695 பேருந்துகள் இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். அதுபோல், மொத்தமுள்ள நடைகளில், 1 லட்சத்து 68 ஆயிரத்து 500 நடைகள் இந்த திட்டத்தில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவர்.
வெற்றிப் பயண பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு எந்திரங்களுடனான (இ.டி.எம்.) இணைப்பு பணி நிறைவடைந்தது. கடந்த மாத இறுதியில் சோதனை மற்றும் சரிபார்ப்பு பணிகளும் நடந்து முடிந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இன்று (அக். 2) இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய், சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் இலவச அரசு பேருந்து பயணம் மேற்கொள்ளலாம்.