

காவிரி விவகாரத்தை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பயிர்க்கடன் தள்ளுபடி, மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்து.
அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
காவிரியில் நமக்குரிய நீரை பெற்றுத் தராத தவெக அரசு ரீல்ஸ் போடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது.
ரீல்ஸ் மட்டும் போட்டு வரும் தவெக அரசானது விவசாயிகள் மற்றும் மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.
ரீல்ஸ் போடுவதும் ரீல் விடுவதும் தமிழக வெற்றிக்கழக அரசின் வேலையாக உள்ளது.
விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்காததால் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வறண்டு கிடக்கின்றன.
தலைமைச் செயலகத்தில் தனக்கான அறை மாற்றம் தான் முதலமைச்சர் விஜய்க்கு முக்கியம். மக்கள் முக்கியமில்லை.
நானும் அங்கு இருந்தேன், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினும் அங்குதான் இருந்தார். ஆனால் தற்போதைய முதல்வர் அறை மாற்றுகிறார்.
நடிகர் என்பதால் அறை நவீனமயமாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்து முதலமைச்சர் விஜய் அறையை மாற்றுகிறார்கள்.
விவசாயிகள் உணவுக்கே வழியின்றி உள்ள நேரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அறை மாற்றம்தான் முக்கியமா?
நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசு, முதலமைச்சர் விஜய் சென்று பேசினால் நீர் திறக்கும் என்பது நகைச்சுவை. 50 ஆண்டுகாலமாக காவிரி விவகாரத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த வரலாறு தெரியாமல் தவெக அரசு செயல்படுகிறது.
போராடி, வாதாடி பெற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையே கர்நாடகா மதிப்பதில்லை. பேச்சுவார்த்தை நடத்தினால் நீர் திறப்பார்களா?
வேண்டுமென்று காலம் தாழ்த்துவதற்காகவே கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விஜய் முயற்சிக்கிறார்.
விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தவெக அரசுக்கு விவசாயிகள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆகும் நிலையில் தவெகவுக்கு காவிரி போராட்ட வரலாறு எல்லாம் தெரிய வாய்ப்பில்லை. கூட்டணியில் கட்சிகள் கூட அனைத்து கட்சி கூட்டம் கூட்டுமாறு வலியுறுத்தியும் தவெக அரசு கேட்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.