வருகிற 28-ந்தேதி முதலமைச்சர் விஜய் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய திட்டம்

அரசு மருத்துவமனை கட்டிடங்கள், வளாகங்கள் ஆகியவற்றையும் தூய்மைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
Meenakshi amman temple - CM Vijay
Published on
Summary

கடந்த 17-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

த.வெ.க. அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் விழா மதுரையில் வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெறும் இந்த விழாவில் கடந்த ஜூன் 22-ந்தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரத்தை முதலமைச்சர் விஜய் வழங்குகிறார்.

இதற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு வார்ட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அரசு மருத்துவமனை கட்டிடங்கள், வளாகங்கள் ஆகியவற்றையும் தூய்மைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சேதமடைந்த கட்டிடப்பகுதிகள் பொதுப்பணித்துறை மூலம் சரி செய்யப்பட்டு வருகின்றன.

ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கும் குப்பை, கழிவுகளை முழுமையாக அகற்றும் வகையில் தூய்மை பணியாளர்களும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தங்க மோதிரம் வழங்கும் விழாவை நடத்துவது குறித்தும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும், போலீசாரும் இணைந்து பணிகளை செய்து வருகிறார்கள்.

கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

இதனிடையே கடந்த 17-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கும்பாபிஷேக தினத்தன்று விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்த முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் காரணமாக மதுரை வரவில்லை. முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக மதுரை வரும் விஜய் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய விரும்புவதாக த.வெ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக தேவைப்படும் பட்சத்தில் வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசாரை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் முதலமைச்சர் விஜய் வருகை தொடர்பாக அதிகார பூர்வ தகவல் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து வந்த பின்னர் மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

முதலமைச்சர் விஜய் மதுரையில் சுற்றுப்பயணம் செய்யும் பகுதிகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com