

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், Raptee.HV நிறுவனத்தின் முதன்மை அனுபவ மையத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மின்சார மோட்டார் சைக்கிள் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் இந்நிறுவனம், 240V உயர் மின்னழுத்தக் கட்டமைப்புடன் இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் T30-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னோடி உயர் மின்னழுத்த (High-Voltage) மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான Raptee.HV நிறுவனம், சென்னை, பெருங்குடி, OMR சாலையில் நிறுவியுள்ள மூன்று தளங்களைக் கொண்ட புதிய முதன்மை அனுபவ மையத்தைக் (Flagship Experience Centre) காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மணப்பாக்கத்தில் செயல்படும் Raptee.HV நிறுவனம், மின்சாரக் கார் தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கும் முழுமையான மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாகும். Tesla, Wipro மற்றும் சர்வதேச வாகனத் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட தமிழ்நாட்டிலுள்ள MIT, குரோம்பேட்டை மற்றும் NIT, திருச்சி பொறியியல் கல்லூரிகளில் பயின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்களால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தனது பிரத்யேக HV-TEC தொழில்நுட்பத் தளத்தை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் உயர் மின்னழுத்தத் தொழில்நுட்பத்தை மின்சார மோட்டார் சைக்கிள்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிறுவனத்தின் T30, இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் ஆகும். இது 240V மின்னழுத்தக் கட்டமைப்பையும், மின்சாரக் கார்களுக்கான CCS2 பொது DC விரைவு மின்னேற்றத் தரநிலையுடன் இணக்கத்தன்மையையும் கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கிடவும், ஏற்கெனவே செயல்பட்டுவந்த தொழிற்சாலை விற்பனை மையத்திலிருந்து மேம்பட்டு, வாடிக்கையாளர்கள் மோட்டார் சைக்கிளை முழுமையாக அறிந்து உணரும் வகையில் இப்புதிய அனுபவ மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வாடிக்கையாளர்கள் மோட்டார் சைக்கிளை நேரில் பார்வையிடுவதுடன், அதன் 240V உயர் மின்னழுத்தக் கட்டமைப்பு மற்றும் அதனை இயக்கும் நவீன தொழில்நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். மேலும், நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினருடன் கலந்துரையாடவும், சோதனை ஓட்டம் மேற்கொண்டு மோட்டார் சைக்கிளின் செயல்திறன் குறித்த அனுபவத்தை நேரில் பெறுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் புது யுகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தனது புதிய Startup முதலீட்டுக்கொள்கையைப் பயன்படுத்தி, தொடக்கமாக Raptee Energy Pvt. Ltd., நிறுவனத்தில் 25 கோடி ரூபாய் கட்டாய மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகள் (Compulsory Convertible Preferential Shares – CCPS) முறையில் முதலீடு செய்துள்ளது. மேலும், Agnikul Cosmos மற்றும் பல Startup நிறுவனங்களில் முதலீடு செய்யவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் விஜயகுமார், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் கார்த்திகேயன், இ.ஆ.ப., செயல் இயக்குநர் வாகே சங்கேத் பல்வந்த், இ.ஆ.ப., ராப்டீ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (Raptee Energy Private Limited) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தினேஷ் அர்ஜுன், இணை நிறுவனர்கள் ஆர். கீர்த்திவாசன், ஏ.கார்த்திகேயன், புனித் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.