

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து நேற்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 9 மணி அளவில் சென்னை வந்தடைந்தார்.
சென்னை விமானநிலையத்தில் அவரை தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகளும் வரவேற்றனர். அதன்பின் அமித்ஷா காரில் கோவளத்திற்கு மாநாடு நடைபெ றும் நட்சத்திர ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.
அங்கு நட்சத்திர ஓட்டலில் மத்திய மந்திரி அமித்ஷாவை முதலமைச்சர் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா, அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர். லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில உயர்அதிகாரிகள் வந்திருந்தனர்.
அவர்களும் மத்திய மந்திரி அமித்ஷாவை வரவேற்றனர். அதனை தொடர்ந்து அமித்ஷா சிறிது நேரம் கலந்துரையாடினார். அமித்ஷாவும், விஜய்யும் சந்தித்து சிறிது நேரம் பேசினர். அதன்பின் இரவு விருந்தில் அனைவரும் உணவருந்தினர். இரவில் அந்த ஓட்டலில் அமித்ஷா தங்கினார்.
மாநாட்டில் பங்கேற்க கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன் ஆகியோர் நேற்று நள்ளிரவு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் இன்று மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மேலும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணிப்பதாகவும், அவருக்கு பதிலாக கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பதாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அதே ஓட்டலில் தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மற்றும் தென் மண்டல குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் தென் மண்டல குழுவின் தலைவராக அமித்ஷாவும், துணை தலைவராக முதலமைச்சர் விஜய்யும் உள்ளனர். இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், நீர் பங்கீடு, கல்வி, சுகாதாரம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் 'பாரத குழு' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்பட்டுள்ள மண்டல குழு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும் மத்திய-மாநில அரசுகளின் உறவை மேம்படுத்தும் வகையிலும் இம்மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டில் தொகுதி மறுசீரமைப்பு, காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம், 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கர்நாடகாவிடம் தமிழக அரசு தரப்பில் பேசி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் புறப்பட்டார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய் கோவளம் சென்றடைந்தார்.