

மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில், அதாவது Digital Driving License மற்றும் Digital Registration Certificate வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் 110 கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நமது அரசு ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிசெய்வதுடன், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் எளிமையான முறையில் மக்களைச் சென்றடையும் வகையில் தொடர்ந்து நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
தற்போது, தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்று பெறுவதற்குக் கட்டணமாக 250 ரூபாய் விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்டு, சிப் (Chip) பொருத்தப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர்களுக்குக் கிடைப்பதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது.
இந்தக் காலதாமதத்தினால் பொதுமக்களுக்குப் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இந்த காலதாமதத்தினைத் தவிர்க்கும் வகையில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்றிதழ் ஆகியவை Digital முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில், அதாவது Digital Driving License மற்றும் Digital Registration Certificate வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
மின்னணு வாகனப் பதிவுச்சான்றிதழ் முறை (Digital RC) அறிமுகம் செய்வதன்மூலம், புதிய வாகனம் வாங்குவோர், வாகனப் பதிவை அதாவது, Digital RC–யை இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோன்று ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, அன்றைய தினமே ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.
அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் QR code-ஐ scan செய்து மின்னணு முறையில் ஆவணங்களைச் சரிபார்க்க முடியும். இதன்மூலம் போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும். இந்த முறையினால், ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக்கொள்ளவும் முடியும்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாகனத்தைப் பதிவு செய்வதற்கும், வாகனப்பதிவு புதுப்பித்தல் மற்றும் படிப்படியாக போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் தமிழ்நாட்டில் எந்தவொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து “Anywhere Registration / Licensing” என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.