மதுராந்தகம் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள்- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசரகாலச் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on: 
Summary

மதுராந்தகம் தொகுதியில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். புதிய தடுப்பணைகள், நெல் கொள்முதல் நிலையங்கள், மருத்துவமனை வசதிகள், கல்வி நிறுவனங்கள், சுற்றுலா பூங்கா, மின்மாற்றிகள், மற்றும் வீடமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

வளர்ச்சி திட்டங்கள்

1. அத்திமனம் கிராமத்தில் புக்கத்துறை மடுவின் குறுக்கே ஒரு தடுப்பணை சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். செம்பூண்டி ஊராட்சியில் உள்ள பொதுப்பணித் துறை ஏரியின் மதகுகள் சுமார் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். நெல்வாய் ஊராட்சியிலுள்ள மடுவைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தும் பணி சுமார் 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். தின்னலூர் ஊராட்சியில் ஒரு புதிய சமுதாய நலக்கூடக் கட்டடம் சுமார் 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

2. மதுராந்தகம் தொகுதியில் தலா 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 நெல் கொள்முதல் நிலையங்கள் சுமார் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையிலும், கொள்முதல் செய்யப்படும் நெல்லினைப் பாதுகாக்கும் வகையில் ஆத்தூரில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட SEMI COVERED கிடங்கு அமைக்கப்படும். மேலும், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் மாநில விதைப் பண்ணை அமைக்கப்படும்.

3. மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

4. பாலாற்றின் குறுக்கே படாளம் மற்றும் உதயம்பாக்கம் இடையே ஒரு புதிய உயர்மட்ட தடுப்பணை கட்ட சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். 1984-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சுமார் 30 கி.மீ. நீளமுள்ள மதுராந்தகம் உயர்மட்டக் கால்வாயை 30 ஏரிகளுக்கு நீர் கிடைக்க செய்யும் வகையில் தூர்வாரி, அதன் கட்டமைப்புகள் படிப்படியாகச் சீரமைக்கப்படும்.

5. மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசரகாலச் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.

6. மதுராந்தகம் ஏரியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

7. மதுராந்தகம் நகராட்சியில் பணிபுரியும் பெண்களுக்கான ஒரு புதிய தங்கும் விடுதி அமைக்கப்படும். மேலும், படித்த இளைஞர்களுக்காக சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கப்படும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைக்கப்படும். புதிய மழைநீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

8. புக்கத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும். கருங்குழியில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மினி விளையாட்டு மைதானம் சுமார் 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்துத்தரப்படும்.

9. மதுராந்தகம் துணை மின் நிலையத்தில் கூடுதலாக சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 MVA திறன்கொண்ட மின்மாற்றி நிறுவப்படும்.

10. மதுராந்தகம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம், பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் வீடற்ற குடும்பங்களுக்கு நிரந்தர குடியிருப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான வாழ்விடத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய வீடுகள் கட்டி வழங்கப்படும்.

11. செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலிருந்து விவசாயிகள் தங்களது விளைபொருள்களை எடுத்துச்செல்லவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் எளிதாகப் பயணம் செய்யும் வகையிலும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட அறிவிப்புகளை விரைவாக நிறைவேற்றிட சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com