

சென்னையில் மேகவடிப்பு ஏற்பட்டதுபோல மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.
மேகவெடிப்பு?
சென்னையில் குறிப்பாக கத்திவாக்கம், பாரிமுனை மற்றும் திருவொற்றியூர் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னையில் கடந்த 3 மணி நேரத்தில் மேகவெடிப்பு போன்ற மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் கத்திவாக்கத்தில் 26 செ.மீ., பாரிமுனை 25.5 செமீ, திருவெற்றியூர் 15 செ.மீ, தண்டையார்பேட்டை 10 செ.மீ, எண்ணூர் 9 செ.மீ, மணலி 9 செ.மீ, மாதாவரம் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தற்போது மேகங்கள் தென்சென்னையை நோக்கியும் நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இன்று இரவு முழுவதும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். மேலும் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், அரபிக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.