

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையிலான உயர்மட்டக் குழு செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளது.
தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 10-ந்தேதி முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகிற 10-ந்தேதி பிரிட்டன் சென்று செப்டம்பர் 16-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இந்த பயணத்தின் போது பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முதலமைச்சர் விஜய் வெளிநாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு (AI), சிப் தயாரிப்பு உள்ளிட்ட நவீன தொழில் நுட்பத் துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் ‘செமிகான்’ (Semicon) மாநாடு இந்த வாரம் தைவானில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழுவினர் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி தைவான் புறப்பட்டுச் செல்கின்றனர். இம்மாநாட்டின் மூலம் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களுக்கு இடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், தமிழக அரசின் இந்த அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்கள் புதிய வேலைவாய்ப்புகளையும் தொழில் வளர்ச்சியையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.