

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ஆணையாளர் சமீரன், துணை மேயர் மகேஷ் குமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பின்பு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பலத்த எதிர்பார்ப்புடன் கூட்டம் தொடங்கியது.
பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் ரிப்பன் மாளிகை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். கூட்ட அரங்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-
மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம்: பல அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்துள்ளனர் ஓரவஞ்சனையாக மாற்றப்பட்டுள்ளனர். தந்துவாடியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் இருந்தது. அதை மணலி சி.பி.சி.எல். நிர்வாகத்திடம் கூறி லாரி நிறுத்தமாக மாற்றினர். ஆனால் அதை மீண்டும் மாநகராட்சியிடம் ஒப்படைக்க மறுக்கின்றனர். அது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
சிற்றரசு(தி.மு.க.): முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படங்களை மண்டல குழு கூட்ட அரங்குங்களிலும் வைக்க ஆணையாளர் அனுமதி தர வேண்டும். ஏற்கனவே இதற்கு அரசாணை உள்ளதாக கவுன்சிலர் விசுவநாதன் உட்பட பலர் பேசினர்.
அ.தி.மு.க. குழு தலைவர் சதீஷ்குமார்: தனது வார்டு வர்ம காலனி பகுதியில் 2000 மக்கள் இருக்கின்றனர். ஆனால் எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. ஓட்டு மட்டும் உள்ளது, நாமெல்லாம் ஓட்டு திருடுகிறோம்.
மேயர் பிரியா: அந்த பகுதி ஆக்கிரமிப்பில் இருப்பதால் அங்கு நாம் எந்த வசதியும் செய்ய முடியவில்லை. நாங்கள் நேரில் ஆய்வு செய்து பதில் சொல்கிறோம்.
இவ்வாறு மேயர் கூறியதும் அந்த பகுதி மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் பேச எழுந்தார். அவரை சதீஷ்குமார் நீங்கள் அமருங்கள் என கூறினார். அதற்கு தி.மு.க. மாமன்ற உறுப்பினர் கவி கணேசன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது அவர் நீங்கள் அரசியல் பேசினீர்கள். நான் வார்டு சம்பந்தமாக பேசுகிறேன். என் தலைவரை பற்றி பேசவில்லை என கூறினார்.
அதற்கு, தி.மு.க. தரப்பில் உங்களுக்கு தலைவரே இல்லையே என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தனது இருக்கையை விட்டு எழுந்து தி.மு.க. உறுப்பினர்களை நோக்கி வேகமாக வந்தார். அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் தங்களது இருக்கையை விட்டு எழுந்து அவரை நோக்கி ஓடி வந்தனர்.
மாமன்ற உறுப்பினர் கவி கணேசன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். 1-வது வார்டு உறுப்பினர் சிவக்குமார் தனது கையில் இருந்த பேப்பர்களை சதீஷ்குமாரை நோக்கி வீசி எறிந்தார்.
இதையடுத்து மூத்த உறுப்பினர்கள் சரவணன், பரிமளம் ஆகியோர் தி.மு.க. உறுப்பினர்களை சமாதானப்படுத்தி இருக்கைக்கு அழைத்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அவையில் ஒரே சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் கவி கணேசன் (தி.மு.க.) பேசுகையில், புதிய ஆட்சி பொறுப்பேற்றது முதல் இன்று வரை நாம் சந்தித்த இடர்பாடுகள் அதிகம். மண்டலக்குழு தலைவருக்கு இணையாக எனது மண்டலத்தில் சட்டமன்ற உறுப்பினர் எப்படி அமர முடியும்? மாநகராட்சி மன்ற மரபு மாண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
மேயர் பிரியா பதில் அளித்து பேசும்போது, மண்டல குழு தலைவருக்கு அந்த மண்டலத்தில் உள்ள அனைத்து வார்டு மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தொகுதிக்கு உட்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து பேசலாம். மண்டல அலுவலக கூட்டங்களில் எம்.எல்.ஏ.க்கள் பங்கு பெறவும் மண்டல தலைவர் அமரும் மேடையில் உட்காரவும் உரிமை உண்டு. அவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி தான். அதனால் அவர் அமரலாம் என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.