விமான சாகச நிகழ்ச்சி: எதிர்பார்த்ததை விட மிகமிக அதிக அளவில் மக்கள் வந்தனர் - முதல்வர் விளக்கம்

ஒத்துழைப்பு, வசதிகளை செய்துத்தர இந்திய விமானப்படை கோரிக்கை விடுத்து இருந்தது.இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விமான சாகச நிகழ்ச்சி: எதிர்பார்த்ததை விட மிகமிக அதிக அளவில் மக்கள் வந்தனர் - முதல்வர் விளக்கம்
Published on

இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நேற்றைய சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் மெரினாவில் கூடிய மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண எதிர்பார்த்ததை விட மிக அதிகமானோர் வந்ததே நெரிசல் ஏற்பட காரணம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "சென்னையில் இந்திய விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துத்தர இந்திய விமானப்படை கோரிக்கை விடுத்து இருந்தது."

"விமான சாகச நிகழ்ச்சிக்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்திருந்தன. இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது."

"இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட மிகமிக அதிக அளவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும் போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப் போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும்,". என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com