

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் உட்பட 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து நாளை முதல் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் த.வெ.க. நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
த.வெ.க. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் முதலமைச்சர் விஜய், கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், காதர் மொய்தீன், எம்பிக்கள் ரவிக்குமார், துரை வைகோ, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், அருண்ராஜ், ராஜ்மோகன், ரமேஷ், ஸ்ரீநாத், வன்னிஅரசு உள்ளிட்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.