

புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள், செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அடர்ந்த காடுகள் நிறைந்த வனவிலங்குகள் சரணாலயமாக இருந்து வருகிறது.
குறிப்பாக இங்கு பல்வேறு வன விலங்குகளும், 260 ரக பறவையினங்களும், ஆசியாவின் மிகப்பெரிய வளர்ப்பு யானைகள் முகாமும் இங்கே அமையப்பெற்றுள்ளது. இந்த நிலையில் இவற்றினைக் காண ஜீப் சவாரி மூலம் பல்வேறு சுற்றுலா பயணிகள் அனுதினமும் குவிந்து வருகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பல சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து ஜீப் சவாரி மூலம் விலங்குகளை காண செல்கின்றனர். அப்போது அதிக ஒலியுடன் செல்போனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது அங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு கடும் அச்சுறுத்தலையும், தொந்தரவையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வனவிலங்குகளுக்கு ஏற்படும் இடையூறை தடுக்கும் நோக்கில், முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதுமலை வனச்சரகர் யுவராஜா தெரிவித்துள்ளதாவது..
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மைய வாழ்விட சுற்றுலா மண்டலங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவாரி செல்லும் பார்வையாளர்கள் தங்களது செல்போன்களை சவாரி வாகனங்களில் பாதுகாப்பாக ஒப்படைத்து, பயணம் முடிந்த பின்பு பெற்றுக்கொள்ளலாம். பார்வையாளர்களின் ஒருமித்த ஆதரவே வன விலங்குகள் பாதுகாப்புக்கு பெரும் உதவியாக இருக்கும்”.