

தமிழ்நாடு நாளாக நவம்பர் 1-ஆம் தேதியை கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படாதது மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்படாதது தமிழ் உணர்வாளர்களை ஏமாற்றும் நிலையை உருவாக்கும் என அவர் கூறினார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தமிழ்நாடு மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் எதுவும் தமிழக அரசால் இதுவரை மேற்கொள்ளப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழ்நாடு நாளையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படாதது கண்டிக்கத்தக்கது.
மொழிவாரி மாநிலங்கள் உருவான நவம்பர் ஒன்றாம் தேதியை, அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைப் போல தமிழ்நாடும் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதையேற்று முந்தைய அதிமுக ஆட்சியில் நவம்பர் 1 தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக, சம்பந்தமே இல்லாமல் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது. அதை பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழ் உணர்வாளர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் ஜூலை 18-ஆம் நாள் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து ஜூலை 18-ஆம் நாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், ’’மெட்ராஸ் மாநிலம் உருவான நவம்பர் 1-ஆம் நாளையும் ‘தமிழ்நாடு' பெயர் சூட்டும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் அரசு கொண்டாடும்” என்று அறிவித்திருந்தார்.
நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் இரு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் எதையும் தமிழக அரசு செய்யவில்லை; அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை; வழக்கமாக தமிழ்நாடு நாளையொட்டி மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளும் நடத்தப்படவில்லை. அதனால், முதலமைச்சரின் அறிவிப்பையும் மீறி, இந்த விஷயத்தில் தமிழ் உணர்வாளர்களை அரசு ஏமாற்றி விடுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு நாள் என்றால் அது நவம்பர் ஒன்றாம் நாள் தான். அது தான் மக்கள் மனதில் நிலைநிறுத்தப்பட வேண்டும். மாணவச் செல்வங்களுக்கு பெருமைமிக்க உண்மை வரலாற்றை போதிக்க வேண்டும். அதற்கு வசதியாக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்தவாறு நவம்பர் ஒன்றாம் நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்; அதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.