சாதிவாரி பிரதிநிதித்துவத்தை சாத்தியமாக்க சமூகநீதி போராட்டத்தை மேலும் கூர்மைப்படுத்துவோம்!- அன்புமணி

ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான இடஓதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி.
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
Published on: 
Summary

சாதிவாரி பிரதிநிதித்துவத்தை முழுமையாக சாத்தியமாக்க தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்காய்வு நடத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். 100% வகுப்புவாரி இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதின் நூற்றாண்டு தொடக்கத்தை கொண்டாடும் நிலையில், சமூகநீதிக்கான போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று... நவம்பர் 4.

99-ஆம் ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் அன்றைய சென்னை மாகாணத்தில் 100% வகுப்புவாரி பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்றாவது கம்யூனல் ஜி.ஓ எனப்படும் அரசாணை எண் 1071 நிறைவேற்றப்பட்டது. அதை சாத்தியமாக்கியவர்கள் அன்றைய முதலமைச்சர் ப.சுப்பராயனும், கல்வித்துறை அமைச்சரான கும்பகோணம் முத்தையா முதலியாரும்.

முழுமையானதல்ல

அதன்பின் 1935-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கும் நீட்டிக்கப்பட்ட 100% இட ஒதுக்கீடு, 1950-ஆம் ஆண்டு செண்பகம் துரைராஜன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை நீடித்தது. அதன்பின் 1951-ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தத்தின் பயனாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25%, பட்டியலினத்தவருக்கு 18% என மொத்தம் 41 விழுக்காட்டுடன் தொடங்கிய புதிய இட ஒதுக்கீடு இப்போது 69% ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், இது முழுமையானதல்ல.

கடந்த 100 ஆண்டுகளில் 1921, 1922 ஆகிய ஆண்டுகளில் முதல் இரு கம்யூனல் ஜி.ஓக்களை நிறைவேற்றிய பனகல் அரசர், மூன்றாம் கம்யூனல் ஜி.ஓ மூலம் 100% வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை சாத்தியமாக்கிய ப.சுப்பராயன், கும்பகோணம் முத்தையா முதலியார், அதில் சீர்திருத்தங்களை செய்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், சுதந்திர இந்தியாவில் இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்திய, உள் இட ஒதுக்கீடும் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பும் வழங்கிய முதலமைச்சர்கள் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கும், பல்வேறு காலகட்டங்களில் சமூகநீதிக்காக போராடி இட ஒதுக்கீட்டை வென்றெடுத்த பொப்பிலி ராஜா, ஆற்காடு இராமசாமி முதலியார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், தமிழ்நாட்டில் மட்டும் 4 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்த சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா ஆகியோர் போற்றத்தக்கவர்கள். சமூகநீதி வரலாற்றில் என்றென்றும் அவர்கள் பெயர் நிலைத்திருக்கும்.

ஆனால், தமிழ்நாட்டில் இப்போது நிலவுவது முழுமையான சமூகநீதி அல்ல. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான இடஓதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி. அந்த இலக்கை அடைவதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்காய்வு நடத்தப்படும்; அதற்கான ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது. அதற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் 100% வகுப்புவாரி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு தொடக்கத்தை கொண்டாடும் வேளையில், சமூகநீதிக்காக பங்களித்த, உயிர்தியாகம் செய்த அனைவரையும் வணங்குவோம். அதே வேளையில் 100% சாதிவாரி பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்குவதற்கான போராட்டங்களை மேலும் கூர்மைப்படுத்த இந்த நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்.

X