

தமிழகத்தில் சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான நிபந்தனைகள் சாத்தியமற்றதாக உள்ளதால், விவசாயிகள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். இதை சமாளிக்க, மத்திய அரசுடன் பேச்சு நடத்தி, நிபந்தனைகளை மாற்றி, காப்பீட்டுக்கான காலக்கெடுவை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் சம்பா பயிர்க்காப்பீட்டுக்காக காப்பீட்டு நிறுவனங்களும், வேளாண்துறை அதிகாரிகளும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை முன்வைப்பதால் பெரும்பான்மையான விவசாயிகளால் தங்களின் பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடியை ஏற்கனவே இழந்துள்ள நிலையில், சம்பா பயிர்களுக்கு காப்பீடு இல்லாவிட்டால் உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்.
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா பருவத்தில் 14 லட்சம் ஏக்கர், தாளடி பருவத்தில் 4 லட்சம் ஏக்கர் என மொத்தம் 18 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களையும் சேர்த்தால் 32 லட்சம் ஏக்கர் முதல் 34 லட்சம் ஏக்கர் வரையிலான பரப்பளவில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்படும். ஆனால், மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தால் காவிரி பாசன மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கரில் மட்டுமே சம்பா/தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் பார்த்தால் சம்பா சாகுபடி பரப்பு பாதியாக குறைந்து விட்டது. சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்வது குறித்த அறிவிப்பை கடந்த அக்டோபர் 9&ஆம் தேதி வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்கள், நவம்பர் 15&ஆம் தேதிக்குள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், காப்பீடு செய்வதில் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
ஒரு விவசாய நிலத்தில், அதன் பட்டாதாரர் சாகுபடி செய்தால் மட்டும் தான் பயிர்க்காப்பீடு வழங்க முடியும்; இதை உறுதி செய்வதற்காக பட்டாதாரரின் தொலைபேசி எண்ணுக்கு OTP எனப்படும் ஒருமுறை கடவுச் சொல் அனுப்பப்படும்; அந்தக் கடவுச் சொல்லை குறித்த நேரத்திற்குள் கொடுத்தால் மட்டும் தான் காப்பீடு செய்ய முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சம்பா பயிர்க்காப்பீட்டுக்கு பெரும் தடையாக இருப்பது இது தான். பட்டாதாரர்களில் பலர் இறந்து விட்டனர்; அவர்களில் பலருக்கு செல்பேசி பயன்படுத்தும் வழக்கமே இருக்காது. அவர்களின் வாரிசுகளோ அல்லது குத்தகைதாரர்களோ தான் அந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இத்தகைய சூழலில் OTP அனுப்பி அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை சாத்தியமற்றது.
மேலும், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களையும், தனியாருக்கு சொந்தமான நிலங்களையும் ஏழை விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்வார்கள். அந்த நிலங்களுக்கான உழவர்கள் அடையாள எண் அவர்களிடம் இருக்காது. உழவர்கள் அடையாள எண்ணை (Farmer ID) தெரிவிக்கும்படி கட்டாயப்படுத்தப் படுகின்றனர். மூன்றாவதாக ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களின் கடன்தொகையில் ரூ.75,000 தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக அரசுத் தரப்பில் கூறப்படும் நிலையில், அதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படாததால், அவர்கள் நேரடியாக பயிர்க்காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உழவர்களில் பெரும்பான்மையினர் அதிகம் படிக்காதவர்கள். அதைக் கருத்தில் கொண்டு காப்பீட்டுக்கான நடைமுறைகளை மிகவும் எளிமையானதாக மாற்ற வேண்டும்; முகாம்களை நடத்தி பயிர்க்காப்பீட்டுக்கான விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பயிர்க்காப்பீட்டுக்கான நிபந்தனைகளையும் நடைமுறைகளும் கடுமையாகிக் கொண்டே செல்வதால் ஏழை & நடுத்தர உழவர்களுக்கு காப்பீடு என்பதே கசப்பான அனுபவமாக மாறுகிறது.
தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி பரப்பு வழக்கத்தை விட பாதியாக குறைந்திருக்கிறது. பயிர்க் காப்பீடுக்கான நிபந்த¬னைகள் கடுமையாக்கப்பட்டிருப்பதால், அதில் 25% பரப்பளவுக்குக் கூட காப்பீடு செய்ய முடியாத நிலை உருவாகும். இது பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்து விடக் கூடும்.
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் தான் சம்பா நெல் பயிர்களுக்கு காப்பீடு மிகவும் அவசியமானதாக மாறியிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் குறுவை சாகுபடி வெகுவாக குறைந்து விட்டதால் உழவர்கள் வருவாயை இழந்து தவிக்கின்றனர். சம்பா சாகுபடியையும் விவசாயிகள் நிச்சயமற்ற நிலையில் தான் மேற்கொண்டுள்ளனர். சம்பா பயிர்களைக் காப்பாற்ற அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை காவிரியில் தண்ணீர் வழங்கப்படாவிட்டாலோ, எல் நினோ தாக்கம் காரணமாக வடகிழக்கு பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்தாலோ பயிர்கள் அழிந்து உழவர்களுக்கு பேரிழப்பு ஏற்படும். குறுவை வருவாயை இழந்தவர்களுக்கு இது இரட்டை இடியாக அமையும். அதை சமாளிக்க சம்பா பயிர்க்காப்பீடு அவசியமாகும்.
இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன், தமிழக அரசு பேச்சு நடத்தி, நடைமுறைக்கு சாத்தியமற்ற நிபந்தனைகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஆகும் கால அவகாசத்தையும் கருத்தில் கொண்டு சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக்கெடுவை திசம்பர் 15 வரை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.