

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த இரு மாதங்களாக டயர்கள் வாங்கப்படாததால், 1500-க்கும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன; அதுமட்டுமின்றி, பழுதான டயர்களுடன் இயக்கப்படும் பேருந்துகள் விபத்துக்குள்ளாவதாகவும் வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன. மக்கள் பயன்பாட்டுக்கான பேருந்துகளை இயக்குவதில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம், 6 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் என மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை மொத்தம் 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு சொந்தமான 317 பணிமனைகளிலிருந்து 21,198 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த விடியல் பயணத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, வெற்றிப் பயணத் திட்டமாக மாற்றப்பட்டதால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு ஈடு செய்யப்படாததால், ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக பேருந்துகளுக்கு உதிரிபாகங்கள் வாங்கப்படாததன் காரணமாக பேருந்துகளின் இயக்கம் பாதிக்கப்பட்டிருந்தது. அதுவே சரி செய்யப்படாத நிலையில் தான் டயர்கள் பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு பணிமனையிலும் 5 முதல் 10 பேருந்துகள் வீதம் மாநிலம் முழுவதும் 1500-க்கும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்பகுதிகளுக்கு 2 அல்லது 3 பேருந்துகள் சென்று வந்தால், அதில் ஒரு பேருந்து நிறுத்தப்பட்டிருக்கிறது. அதனால், மக்கள் அவசரத் தேவைகளுக்காகக் கூட நகரப்பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
தமிழக அரசால் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டதன் நோக்கமே, கிராமப்புற பெண்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று வாழ்வாதாரம் ஈட்ட வேண்டும் என்பது தான். அரசுப் பேருந்துகள் முடங்கிக் கிடப்பதால் தமிழக அரசின் நோக்கமே பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னொருபுறம், பழுதடைந்த டயர்களைக் கொண்டு இயக்கப்படும் பேருந்துகள் அடிக்கடி பஞ்சர் ஆகுதல், டயர் வெடித்து ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதல் என பல வகையான விபத்துகளுக்கு உள்ளாகின்றன. டயர்கள் கொள்முதலுக்கான புதிய டெண்டர்கள் கடந்த 8 மாதங்களாக கோரப்படாததும், அதனால் புதிய டயர்களை வழங்க டயர் தயாரிப்பு நிறுவனங்கள் மறுத்து விட்டதும் தான் இந்த சிக்கலுக்கு காரணமாகும்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான டயர்களை கொள்முதல் செய்ய 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும். அதன் மூலம் டயர் வழங்குவதற்கான ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்களுக்கு, அடுத்த ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் வரை பழைய விலையில் டயர்களை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு டயர் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோரப்பட்டன.
அதில் வெற்றி பெற்ற நிறுவனங்கள் டயர் வழங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியாகி விட்டது. அதன் பிறகும் செப்டம்பர் வரை 6 மாதங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்ட விலையில் டயர்களை வழங்கிய நிறுவனங்கள், உற்பத்திச் செலவுகள் அதிகரித்து விட்டதாகக் கூறி, கடந்த இரு மாதங்களாக டயர்களை வழங்க மறுத்து விட்டன.
டயர்கள் கொள்முதலுக்கான புதிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படாததற்கு காரணம், போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடி தான். அரசிடமிருந்து வழங்கப்பட வேண்டிய மானியம் உள்ளிட்ட நிதி உதவிகள் வழங்கப்படாததால் தான் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இந்த நிலை உடனடியாக சரி செய்யப்படாவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் நிலை மேலும் மோசமாகிவிடும்.
கிராமப்புறங்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதில் அரசுப் பேருந்துகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவை தான் கிராமப்புறங்களின் மனித வளத்தையும், கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளை பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் நகரங்களுக்கு கொண்டு சென்று, வருவாய் ஈட்ட உதவுவது அரசுப் பேருந்துகள் தான். எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்கவும், அதைக் கொண்டு உடனடியாக டயர்களை கொள்முதல் செய்து மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசுப் பேருந்துகளை விபத்தின்றி இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.