அமோனியா கசிவு: தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்திடவேண்டும்- இபிஎஸ்

தனியார் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Ammonia leak tragedy
Published on

அம்மோனியா நச்சு வாயு கசிவு:

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கண்ணிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் எதிர்பாரா விதமாக அம்மோனியா நச்சு வாயு இன்று கசிந்தது.

இந்த துயரச் சம்பவத்தில் ஏழு பெண்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்:

இந்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள தனியார் இறால் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களைக் காக்க உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை இந்த அரசு தொடர் ஆய்வுகள் மூலம் உறுதி செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com