'சத்தியபாமா சாதாரண பல்டி பாமா அல்ல, அவர் ஒரு அந்தர் பல்டி பாமா'- தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்!

தவெக வேட்பாளர் வெற்றி பெற்றால் மீண்டும் கட்சி மாறுவார் என குற்றச்சாட்டு
 Udhayanidhi Stalin
Published on: 
Summary

சட்டப்பேரவையில் நான் கேட்ட 18 கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை. சட்டப்பேரவையில் யாரும் ஓடக்கூடாது எனச் சொல்லிவிட்டு முதலமைச்சரே ஓடினார்.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் வேட்பாளர் சத்தியபாமாவை கடுமையாக சாடி பேசினார்.

தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "சத்தியபாமா சாதாரண பல்டி பாமா அல்ல, அவர் ஒரு அந்தர் பல்டி பாமா. தேர்தலில் அவர் ஒருவேளை வெற்றி பெற்றால் மீண்டும் கட்சி மாறி விடுவார். சத்தியபாமா மேடையில் அழுததைப் பார்த்து மக்கள் பரிதாபப்பட தேவையில்லை; அவரைத் தேர்வு செய்த மக்கள் தான் அழ வேண்டும்" என்று விமர்சித்தார்.

தொடர்ந்து, சட்டப்பேரவையில் அரங்கேறும் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி பேசிய அவர், சட்டப்பேரவையில் காதில் பஞ்சு வைத்துக்கொள்ளும் அளவுக்கு முதல்வர் விஜய் கத்துகிறார். மதுராந்தகம் தொகுதியில் கத்திப் பேசிய விஜய், தாராபுரத்தில் வந்து நடிக்கிறார். சட்டப்பேரவையில் நான் கேட்ட 18 கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை. சட்டப்பேரவையில் யாரும் ஓடக்கூடாது எனச் சொல்லிவிட்டு முதலமைச்சரே ஓடினார்.

அண்ணன் எடப்பாடி பழனிசாமி பேசியதைக் கேட்கக் கூட பேரவையில் முதல்வர் இல்லை. காதல் தோல்வி பற்றி எம்.எல்.ஏ பேசுகிறார், அதற்கு முதலமைச்சர் சிரிக்கிறார். என்ன கேள்வி கேட்டாலும் பாட்டு மட்டுமே பாடுகிறார்கள். சட்டசபையில் முதல்வர் முன் நடனமும், சண்டைக் காட்சியும் மட்டும்தான் இன்னும் அரங்கேறவில்லை.

தமிழ்நாட்டின் நிலைமை கவலைக்கிடம்

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் ரீல்ஸ் போடுபவர்கள், முறுக்கு சுத்துபவர்கள், உருட்டுக்கட்டை, போதை, திருட்டு விசிடி மற்றும் பவுடர் அமைச்சர்கள் என அமைச்சரவையே விசித்திரமாக உள்ளது. தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டியே நடக்கிறது” எனக் கூறி திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com