

கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.
திருப்பூர் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் கடந்த 4-ந்தேதி அங்கு சென்றிருந்தார்.
அப்போது இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கோவை கார்த்திகா மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள், போலீஸ் நிலையம்முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக தாராபுரம் போலீசார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார், கட்சி நிர்வாகிகள் இசை மதிவாணன், கந்தசாமி, சூர்யா, சஞ்சய் காந்தி, விக்னேஷ், ஷேக் பரித் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இந்த வழக்கில் கார்த்திகாவை தாராபுரம் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
அதன்பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரோடு, வழக்கில் தொடர்புடைய கட்சியினரும் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட கார்த்திகா உள்ளிட்ட 12 பேரும் ஜாமீன் கோரி தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கோவை பெண்கள் மத்திய சிறையில் இருந்து கார்த்திகா இன்று காலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் கோவை சிறையி லிருந்து 8 பேரும் இன்று காலை வெளியே வந்தனர். அப்போது கார்த்திகா மற்றும் கட்சி நிர்வாகிகளை வாசல் முன்பு நாம் தமிழர் கட்சியினர் திரண்டு வரவேற்றனர். அவர்கள் கார்த்திகாவிற்கு மாலை அணிவித்து அழைத்துச்சென்றனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தேர்தல் களத்தில் நின்று மக்களுக்கு பணியாற்ற நினைக்கும் வேட்பாளர்களாகிய எங்களுக்கு வாக்கு கேட்க முழு உரிமைஉள்ளது.
ஆனால், கடந்த 4-ந்தேதி முதலமைச்சர் மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும், மற்ற ஜனநாயக அமைப்புகளோ, வேட்பாளர்களோ பிரசாரம் செய்யக்கூடாது என்று முடக்கியது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது.
நாங்கள் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பிரசாரம் மேற்கொண்டோம். ஆனால், ஆளுங்கட்சி அமைச்சர் அவரது வாகனத்தை குறுக்கே நிறுத்திவிட்டு பிரசாரம் செய்தார். இது எந்த வகையில் நியாயமாகும்?
மக்கள் உரிமைக்காக நின்ற எங்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் தள்ளினர். தற்போது தமிழகம் பண வீக்கம் உச்சத்தில் இருக்கும் மாநிலமாக உள்ளது. ஆளுங்கட்சியினர் தங்களது கையாலாகாத தனத்தை மறைக்கவே இதுபோன்ற அராஜக கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஆட்சி அதிகாரம் மக்களுக்காக போராடும் போராளிகளிடம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வழக்கில் தொடர்புடைய திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை கோகுல், கோவை சிங்காநல்லூர் மோகன், காரைக்குடி வெங்கடேஷ் ஆகிய 3 பேரின் பிணை மனுக்கள் மீது நீதிமன்றம் தனியாக விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.