

சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-
உலகில் தான் உற்பத்தி செய்யும் பாலை தனது சந்ததிகளுக்கு மட்டுமின்றி மனிதர்கள் உள்ளிட்ட பிற ஜீவராசிகளுக்கும் வழங்கி உயிரை காக்கும் பசுவை தெய்வமாக போற்றி வளர்த்து வருவது நமது பாரம்பரியத்தின் சிறப்பு. இன்றைய அறிவியல் உலகில் ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்வதற்காக பசுவின் உடலில் சுமார் 500 லிட்டர் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதாக கூறப்படும் போது, பசுவின் உழைப்பை எண்ணி வியக்க தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3 லட்சத்து 16 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது 4.3 சதவீதம் கொழுப்பு சத்து மற்றும் 8.2 சதவீதம் இதர சத்துக்கள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில ஊக்கத் தொகையாக 1 லிட்டர் பாலுக்கு 3 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை 38 ரூபாய் 5.11.2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளை சுத்தம் செய்து பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலையாட்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளையும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை. உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்துள்ளது.
கடந்த காலத்தில் கொள்முதல் விலை உரிய அளவில் உயர்த்தப்படாத நிலையில் நம் அரசு சந்தித்து வரும் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும் பால் உற்பத்தியாளர்களின் நலனையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்களின் உன்னதமான உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்துவது நமது அரசின் கடமையாகும்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும், மேலும் அரசு ஊக்கத் தொகையை 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்து உள்ளது.
இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 30 கோடியும், ஒரு ஆண்டுக்கு ரூபாய் 360 கோடியும் செலவாகும்.
ஒரு உயிரின் மதிப்பை அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை மருத்துவத் துறையில் இருக்கக் கூடாது. அனைவருக்கும் சமமான மருத்துவ சேவை எளிதாக கிடைக்க வேண்டும் என்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. மருத்துவம் என்பது சலுகை அல்ல. ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை.
ஒரு மனிதனின் உயிரை காப்பாற்றுவதில் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மிகக் கொடியது. மருத்துவத்தை தேடி வரும் மக்களின் பாதையில் இருக்கும் தடைகளான வறுமை, தொலைவு, மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகளின் விலை, மருத்துவ விழிப்பு ணர்வு இல்லாமை, காத்திருப்பு, அவசரகால வசதியின்மை போன்றவற்றை படிப்படியாக அகற்றி, ஏழை, பணக்காரர், கிராமம், நகரம் என்ற பாகுபாடு இன்றி ஒவ்வொருவருக்கும் தரமான மற்றும் எளிதான மருத்துவ சேவை கிடைக்க செய்வதை முதன்மையான நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது நமது அரசு.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை யில் சில அறிவிப்புகளை சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் இன்று வெளியிட விரும்புகிறேன்.
வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில் பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி அமைக்கப்படும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ஆண்டொன்றுக்கு தற்போது உள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.
திருநங்கையர்களுக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில் தரமான மருத்துவ சேவைக்கு தேவையான செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களை உருவாக்கும் வகையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.
7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 660 பி.எஸ்.சி. செவிலியர் மாணவர்கள் இடங்கள் உருவாக்கப்பட்டு ஏற்கனவே உள்ள செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் கூடுதலாக 1925 கூடுதல் மாணாக்கர் இடங்கள், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட 12 துணை மருத்துவ படிப்புகளில் 2,778 மாணாக்கர் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் சுமார் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய்களை தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு மிஷன் ரூ.677 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் ஜி+14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்கப்படும். மேலும் 5 மண்டல புற்றுநோய் மையங்கள், தஞ்சாவூர், கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் நிறுவப்படும். முதல்கட்டமாக ராஜாஜி ஆஸ்பத்திரியில் ரூ.84 கோடியில் ஜி+8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும்.
ரோபாட்டிக் அறுவை சிகிச்சை லீனியர் ஆக்சுலரேட்டர் லினக் கதிர் வீச்சு நவீன கருவிகள் இலக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.106 கோடியே 17 லட்சம் வழங்கப்படும். டாக்டர்களுக்கு பயிற்சி, நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவு ஆகியவற்றுக்காக ரூ.2 கோடியே 77 லட்சம் அளிக்கப்படும். மேலும் தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 1.22 லட்சம் பெண்களுக்கு ரூ.8 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் எச்.பி.வி. டி.என்.ஏ. பரி சோதனை மேற்கொள்ளப்படும். மொத்தம் ரூ.673 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.
பொருளாதார பலம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடருவதற்கும், அவர்கள் தங்களின் தொகுதி பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.