மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு சுணக்கம் காட்டுகிறது: தமிழிசை

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு சுணக்கமாக செயல்பட்டு வருகிறது என்று தமிழிசை கூறினார்.
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு சுணக்கம் காட்டுகிறது: தமிழிசை
Published on

திருச்சி:

புதுக்கோட்டையில் நடைபெறும் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் பா. ஜனதா கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆர்.கே.நகர் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு இல்லை. அங்கு தேர்தல் விதிமுறை நிதிமுறையாக மாறி மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர், தினகரன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றனர். ஆனால் தேர்தலில் பணம் தான் பிரதானமாக அமைந்தது. இந்த தேர்தல் மூலம் பா.ஜ.க.வுக்கு எதிர்காலம் இல்லை என்று கூறி வருகிறார்கள். தோல்வியில் இருந்து மீண்டெழுந்து தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக பா.ஜ. க. உருவெடுக்கும்.

தமிழகத்தில் எந்த சூழ் நிலை நிகழ்ந்தாலும் அதன் பின்புலத்தில் பா.ஜ.க. இருப்பதாக கூறுகிறார்கள். அ.தி.மு.க. அரசு மற்றும் 2ஜி வழக்கின் தீர்ப்பு ஆகியவற்றில் பா.ஜ.க. பின்புலம் இருப்பதாக கூறினார்கள். இப்போது ரஜினி கட்சி ஆரம்பித்ததில் பின்புலம் இருப்பதாக கூற ஆரம்பித்துள்ளார்கள். அது ஏன் என்று தெரியவில்லை.

யாருடைய பின்புலத்திலும் இருக்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. தமிழகத்தில் காலூன்றி விடுவோமோ? என்ற பயத்தில் சிலர் பின்புலம் இருப்பதாக பேசி கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு சுணக்கமாக செயல்பட்டு வருகிறது. ஒகி புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிவாரணங்களும், ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை.

மருத்துவ துறையில் ஊழல்களை தடுக்கவே மத்திய அரசின் மருத்துவ ஆணைய மசோதா. மக்களுக்கு அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ஆணையம்.

தமிழக கவர்னரை மக்கள் ஆளுனர் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது சரியாக வார்த்தைதான். தஞ்சையில் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டது மோசமான நடைமுறை. தி.மு. க., திருமாவளவன் போன்றோரே எதிர்த்து கொண்டிருக்கிறார்கள்.

மத்தியில் 3½ ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் ஆட்சியை பிடிக்க அசுர வேகத்தோடு பணியாற்றி கொண்டி ருக்கிறோம். தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை பா.ஜ.க. ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நடிகர் ரஜினிகாந்தின் பாபா முத்திரையில் தாமரை சின்னம் அகற்றப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தாமரை வெற்றியின் சின்னம். மேலும் அது எங்களது சின்னம். 19 மாநிலங்களில் தாமரைதான் ஆட்சி செய்கிறது என்றார்.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை சென்ற அவர் அங்கு நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கவர்னர் ஆய்வு செய்வதால் கவர்னர் ஆட்சி என்று சொல்லக்கூடாது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடக்கிறது. இதனால் கவர்னர் ஆய்வு செய்வதில்லை. கவர்னரின் ஆய்வை குறை கூறுவது நியாயமல்ல என்றார்.#tamilnews #bjp #tngovt #tamilisai

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com