வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் மேலும் 4 பேருக்கு கொரோனா பரவியது

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் சென்னை, தஞ்சாவூர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தற்போதுதான் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.

இந்தநிலையில் இங்கிலாந்து நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதனால் அங்கிருந்து வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த நவம்பர் மாதம் முதல் இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளை பரிசோதித்து வருகின்றனர். இதுவரை லண்டனில் இருந்து தமிழகம் வந்த சென்னையை சேர்ந்த 4 பேருக்கும், தஞ்சாவூரை சேர்ந்த 3 பேருக்கும், நீலகிரி, தேனி, மதுரையை சேர்ந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு உருமாறிய புதிய வகை கொரோனா பரவி உள்ளதா? அல்லது பழைய கொரோனா வைரசா? என்பதை கண்டறிய புனேவுக்கு ரத்தமாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.

இந்தநிலையில் வெளிநாடு சென்று வந்தவர்கள் மூலம் தொடர்பில் இருந்த 81 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 3 பேர் தஞ்சாவூர் ஆஸ்பத்திரியிலும், ஒருவர் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழகத்திற்கு கடந்த நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 21-ந் தேதி வரை 2,300 பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா டெஸ்ட் எடுத்து வந்திருந்தனர். அப்போது அவர்களுக்கு நெகட்டிவ் தான் இருந்தது.

ஆனாலும் நாங்கள் அதில் 1,300 பேரை கண்டறிந்து மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ததில்தான் 9 பேருக்கு பாசிட்டிவ் என தெரிய வந்தது.

இவர்களுடன் தொடர்புடைய 81 பேருக்கு மீண்டும் பரிசோதித்த போதுதான் 4 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டது.

இவர்களுக்கு தனி வார்டில் நல்ல முறையில் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறோம். ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவிற்கு என்ன சிகிச்சை அளிக்கிறோமோ அதே சிகிச்சையை இவர்களுக்கும் மேற்கொள்கிறோம். இந்த சிகிச்சையே போதுமானதாக உள்ளது. இதிலேயே குணமடைந்து விட முடியும்.

லண்டனில் இருந்து தற்போது விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளையும் முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்கிறோம்.

எனவே கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com