

மும்பை :
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மலைக்க வைக்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வழிதெரியாமல் மகாராஷ்டிராஅரசு விழிபிதுங்கி நிற்கிறது. நாளுக்குநாள் உயரும் பாதிப்பு எண்ணிக்கை மக்களையும் அச்சத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, ஊரடங்கை அமல்படுத்த அதிக பொருளாதார பாதிப்பை சந்திக்கும் வகையில் திட்டத்தை தயாரித்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
முதல்-மந்திரியின் இந்த அறிவிப்பு குறித்து பா.ஜனதா கட்சியின் மாநில தலைவரான சந்திரகாந்த் பாட்டீல் நேற்று கூறியதாவது:-
மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு ஒருபோதும் தீர்வாகாது. அப்படியே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் நீங்கள்(மாநில அரசு) பாதிக்கப்படும் மக்களுக்கு எந்த ஒரு நிவாரண தொகுப்பையும் வழங்க முன்வர மாட்டீர்கள். கடந்த ஒரு வருட காலமாக மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை “மாதோஸ்ரீ ” இல்லத்தில் உட்கார்ந்திருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
இரவு ஊரடங்கில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. யாரும் இரவில் வெளியே செல்வதில்லை. உங்களுடன் உள்ள சிலர் தான் இரவு வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
நீங்கள் உண்மையிலேயே ஊரடங்கை அமல்படுத்த விரும்பினால் ஒரு தொகுப்பை அறிவித்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள்.
கொரோனா பரிசோனையை அதிகரித்தல் மற்றும் தொற்று தடம் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவை கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகும். ஆனால் ஊரடங்கு இதற்கு பதில் ஆகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் சந்தித்தாக வெளிவரும் தகவல் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “ இதுகுறித்த விவரங்கள் எதுவும் என்னிடம் இல்லை. இதுபோன்ற கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். இந்தியாவின் கலாசாரம், அரசியல் ஒருபுறம் இருந்தாலும், நாம் அனைவரும் சந்திக்க வேண்டும். மராட்டியத்தில் இதுபோன்ற கூட்டங்கள் குறைந்துவிட்டன” என்றார்.
மேலும் பா.ஜனதாவுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “பா.ஜனதா தலைமையால் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அது கட்சியின் நலனுக்காகவே இருக்கும் என்பதால் ஏற்றுக்கொள்ளப்படும்” என்றார்.