

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடந்த 19 எதிர்க்கட்சிகளின் சந்திப்பில் அவர், '2024 பாராளுமன்றத் தேர்தலே நமது இலக்காக இருக்க வேண்டும். நாம் அனைவரும் அந்த தேர்தலில் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். அது கடினம் என்றாலும், அதைத் தவிர நம்மிடம் வேறு வழியில்லை' என்று வெளிப்படையாகவும் அதிரடியாகவும் பேசியுள்ளார். காங்கிரஸ் தலைமையில் இதுநாள் வரை நடந்து வந்த ஆலோசனைக் கூட்டங்களில் அதன் தோழமைக் கட்சிகள் மட்டுமே பங்கேற்று வந்தன.
ஆனால் நேற்றைய கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உள்ளிட்டவர்களும் காங்கிரஸ் தலைமையிலான சந்திப்பில் கலந்துகொண்டு, தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இவர்களைத் தவிர தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதல்- மந்திரியுமான உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காஷ்மீரின் முன்னாள் முதல்- மந்திரி மெகபூபா முப்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் முடிந்ததைத் தொடர்ந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், 'எரிபொருள் மீதான சுங்க வரியைக் குறைக்க வேண்டும், பெகாசஸ் உளவு செயலி விவகாரத்தில் தெளிவான பதில் வேண்டும், 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும், மத்திய அரசால் கைது செய்யப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும், ஜம்மூ காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அதே நேரத்தில் இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் 2024 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது என்பது அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டமைப்புக்கு யார் தலைமை வகிப்பார் என்கிற கேள்வியும் பெரிதாக உள்ளது. சமீபத்தில் மேற்கு வங்க தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ள நிலையில், அதை அனைவரும் ஏற்பார்களா என்கிற கேள்வியும் உதித்துள்ளது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'அனைத்து எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வை வீழ்த்துவதில் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும். காங்கிரஸுடன் கூட்டணியில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அந்தக் கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். யார் எதிர்க்கட்சிகளுக்குத் தலைமை வகிக்க வேண்டும் என்கிற கேள்வியை புறந்தள்ள வேண்டும்' என்று மம்தா பேசியதாக கூற்ப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தச் சந்திப்பில், 'நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நமது ஒற்றுமையைக் காட்டினோம். மாநில உரிமைகளை மதிக்காத காரணத்தினால் கூட்டாட்சித் தத்துவம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எனவே இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக செயல்பட வேண்டும்' எனப் பேசியுள்ளதாக தெரிகிறது.
இப்படி எதிர்க்கட்சிகள் ஓரணியில் நிற்பதால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியுமா? இதற்கு பா.ஜ.க.வின் எதிர்வினை என்னவாக இருக்கும்? என்பது குறித்து தெரிந்துகொள்ள அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியை மாலை மலர் இணையதளம் சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம்,
"எதிர்க்கட்சிகளின் திட்டம் கண்டிப்பாக எடுபடாது. காங்கிரஸ் என்பது வீழ்ந்துபோன இயக்கம். அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மற்ற கட்சிகள் காங்கிரஸை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது. தி.மு.க, திரிணாமூல் போன்ற பலம் வாய்ந்த மாநில கட்சிகள், காங்கிரஸ் தலைமையை ஏற்காது. காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீட்டுருவாக்கம் செய்யவே இப்படி மற்றக் கட்சிகளுக்கு ஒரு மாய வலையை தள்ளப் பார்க்கிறது" என்றார் நாராயணன் திருப்பதி.
காங்கிரஸ் மீண்டும் வளர்வது பலமான மாநிலக் கட்சிகளுக்கு பின்னடைவாக அமையும் என்று கூறிய அவர் மேலும், "மம்தாவின் உயர்வுக்கு காரணம் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்ததனாலேதான். தமிழகத்தில் தி.மு.க.வின் வளர்ச்சியும் காங்கிரஸின் வீழ்ச்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. எனவே மீண்டும் காங்கிரஸ் பெரிய சக்தியாக வளர்ந்தால் அது அவர்களுக்குத் தான் பிரச்சனையாக முடியும்" என்று விளக்கினார்
தொடர்ந்து அவரிடம், காங்கிரஸின் வளர்ச்சி, வீழ்ச்சி என்பதை புறந்தள்ளிவிட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் விளைவு எப்படியாக இருக்கும் என்றோம். "மற்ற எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுமானால் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாக இருக்கலாம். மக்களுக்கு அப்படியொரு எண்ணம் இருக்கவில்லை. எந்த காரணங்களினால் காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்தார்களோ, அந்தக் காரணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியோடு இணைந்தால் எந்தக் கட்சியும் மண்ணோடு மண்ணாகும் என்பது நிச்சயம். எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு அரசியல் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதைவிட பெரிய தாக்கம் அந்தக் கூட்டணிக்கு உள்ளேதான் ஏற்படும்" என்று தீர்க்கமாக தெரிவித்தார்.