மணல் விற்பனையில் சேகர்ரெட்டிக்கு ரூ. 493 கோடியும் அரசுக்கு ரூ. 86 கோடியும் கிடைக்கிறது: ராமதாஸ்

மணல் விற்பனையில் சேகர்ரெட்டிக்கு ரூ. 493 கோடியும் அரசுக்கு ரூ. 86 கோடியும் கிடைக்கிறது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
மணல் விற்பனையில் சேகர்ரெட்டிக்கு ரூ. 493 கோடியும் அரசுக்கு ரூ. 86 கோடியும் கிடைக்கிறது: ராமதாஸ்
Published on

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 48 மணல் குவாரிகளின் மூலம் தமிழக அரசுக்கு 2016-17 ஆம் ஆண்டில் கிடைத்த வருவாய் ரூ.86.33 கோடி மட்டுமே என்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசால் கூறப்படும் தொகையை விட 500 மடங்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்பது தான் உண்மை. தமிழக அரசு கூறும் புள்ளிவிவரங்கள் கேலிக்குரியவை.

பல மணல் குவாரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரித் துறையினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி நடத்திய ஆய்வில் ரூ.33.60 கோடி மதிப்புள்ள ரூ.2000 தாள்கள் உட்பட ரூ.140 கோடி பணமும், 180 கிலோ தங்கக்கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது பிணை மனு மீதான விசாரணையின் போது ரூ.33.60 கோடிக்கு புதிய ரூபாய் தாள்கள் எங்கிருந்து கிடைத்தன என்று கேட்ட போது, அவை அனைத்தும் மணல் குவாரிகளில் இருந்து 25 நாட்களில் கிடைத்த வருமானம் என்று அவர் தரப்பில் கூறப்பட்டது.

அதாவது சேகர் ரெட்டிக்கு மணல் குவாரியிலிருந்து ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.1.35 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. இத்தனைக்கும் சேகர் ரெட்டி மணல் விற்பனையாளர் அல்ல. ஆற்றில் மணலை வெட்டி சரக்குந்தில் நிரப்புவது தான் அவரது வேலை. ஒரு சரக்குந்தில் இரு அலகுகள் மணல் ஏற்றப்படும்.

இதற்காக அரசுக்கு ரூ.800 கட்டணம் செலுத்த வேண்டும். அதில் 220 ரூபாய் சேகர் ரெட்டி நிறுவனத்திற்கு வழங்கப்படும். அதைக் கொண்டே சேகர் ரெட்டி ஆண்டுக்கு ரூ.493 கோடி வருவாய் ஈட்டுகிறார்.

இத்தனைக்கும் சேகர்ரெட்டி நிறுவனம் இரு மாவட்டங்களில் மட்டும் தான் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கூலிக்கு மணல் அள்ளிக்கொடுக்கும் சேகர்ரெட்டி நிறுவனமே ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வருவாய் ஈட்டும் போது, தமிழகத்தில் 32 மாவட்டங்களில் அமைந்துள்ள மணல் குவாரிகளின் உரிமையாளரான அரசுக்கு ஆண்டுக்கு ரூ.86 கோடி மட்டும் தான் வருவாய் என்பதை எப்படி ஏற்க முடியும். இது மக்களை ஏமாற்றும் செயல்.

ஆண்டுக்கு ஆண்டு மணல் தேவை அதிகரித்து வரும் நிலையில் அரசுக்கு கிடைக்கும் வருவாய் மட்டும் குறைந்து வருகிறது. 201112ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது மணல் மூலம் கிடைத்த வருவாய் ரூ.188.03 கோடியாகும். 2012-13ஆம் ஆண்டில் இது ரூ.188 கோடியாக குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே ரூ.133.37 கோடி, ரூ.126.02 கோடி, ரூ.91.02 கோடி என்ற அளவில் சரிந்து இப்போது ரூ.86.33 கோடியாக குறைந்திருக்கிறது.

உண்மையில் தமிழகத்தில் ஒரு நாளைக்கு மணல் விற்பனை மூலமாக மட்டும் ரூ.100 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆண்டுக்கு ரூ.36,500 கோடி வருமானம் கொட்டுகிறது. ஆனால், அமைச்சர்களும், ஆளுங்கட்சியினரும் கொள்ளையடித்தது போக எஞ்சிய சிதறலான ரூ.86.33 கோடி மட்டும் தான் தமிழக அரசின் கஜானாவில் சேர்க்கப்படுகிறது.

இவ்வாறு கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு தான் கூவத்தூர் கொண்டாட்டங்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கில் பணம், கிலோக் கணக்கில் தங்கமும் வழங்கப்பட்டன. தமிழகத்தின் பொருளாதார சீர்குலைவுக்கு காரணமாக திகழும் மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக ஆளுனர் ஆணையிட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com